
கல்யாண முருங்கை வடை
தேவை:
கல்யாண முருங்கை இலை - அரை கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
மிளகு, சீரகம் - தலா 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை:
புழுங்கல் அரிசியை ஊறவைக்கவும். கல்யாண முருங்கை இலைகளை நரம்பு நீக்கி, சுத்தம் செய்யவும். ஊறிய அரிசியை களைந்து, அதனுடன் கல்யாண முருங்கை இலை, மிளகு, சீரகம், உப்பு சேர்த்து அரைக்கவும். மாவை வடைகளாக தட்டி, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான, சத்தான கல்யாண முருங்கை இலை வடை ரெடி. கல்யாண முருங்கை இலை, சளி தொந்தரவுகளை போக்கக்கூடியது.
கல்கண்டு வடை
தேவை:
டைமண்ட் கல்கண்டு - 1 கப்
உளுந்தம் பருப்பு - 1 கப்
பச்சரிசி - 4 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - சிறிது
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:
உளுந்தம் பருப்பையும், பச்சரிசியையும் களைந்து, ஊறவைத்து, நீரை முழுவதும் வடித்துவிட்டு கெட்டியாக அரைக்கவும். கடைசியாக கல்கண்டை பொடித்துப் போட்டு, ஒரு சுற்று அரைக்கவும். இதனுடன் ஏலக்காய் தூள் சேர்க்கவும். காய்ந்த எண்ணெயில் மாவை வடைகளாக தட்டிபோட்டு, பொன்னிறமாக பொரத்து எடுக்கவும். வித்தியாசமான, இனிப்பு சுவை கொண்ட கல்கண்டு வடை தயார்.
பட்டாணி வடை
தேவை:
காய்ந்த பட்டாணி - 1 கப்
வர மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - சிறிது
நறுக்கிய முட்டை கோஸ் - அரை கப்
நறுக்கிய மல்லித்தழை - 2 ஸ்பூன்
உப்பு , எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை:
பட்டாணியை கழுவி 6 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். பின்னர் நீரை வடித்து, தோலை நீக்கவும். அதனுடன் உப்பு, வரமிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அதில் மல்லித்தழை, முட்டைகோஸ் கலந்து பிசையவும். வாணலியில் காய்ந்த எண்ணெயில் மாவை வடைகளாக தட்டி போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். கமகம பட்டாணி வடை தயார்.
முந்திரிப் பருப்பு வடை
தேவை:
முந்திரிப் பருப்பு - 1 கப்
பச்சரிசி மாவு - 4 ஸ்பூன்
வர மிளகாய் - 2
இஞ்சித் துருவல் - 1/2 ஸ்பூன்
நறுக்கிய மல்லத்தழை - அரை கப்
உப்பு , எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை:
முந்திரிப் பருப்பை சிறிது நேரம் வெண்ணீரை ஊறவைத்து நீரை வடித்து விட்டு உப்பு மிளகாய் சேர்த்து வெட்டியாக அரைக்கவும். அதில் பச்சரிசி மாவு, மல்லித்தழை கலந்து நன்கு பிசையவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், மாவை வடைகளாக தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். கரகர மொறு மொறு முந்திரி பருப்பு வடை தயார்.