
நமது பாரம்பரிய உணவான காஞ்சிபுரம் இட்லி நாம் அனைவருக்கும் தெரிந்ததொரு காலை உணவு. இதை இப்பொழுதும் அநேக வீடுகளில் தீபாவளி போன்ற விஷேச நாட்களில் தவறாமல் செய்து குருமா போன்ற சைட் டிஷ்ஷுடன் உட்கொண்டு வருகின்றனர். பிறர்க்கும் கொடுத்து மகிழ்கின்றனர். நாம் இப்போது காஞ்சிபுரம் தோசை, அதற்கு தொட்டுக்கொள்ள கருப்புக் கடலை சட்னி செய்வது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
காஞ்சிபுரம் தோசை:
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி 1 கப்
உளுத்தம் பருப்பு ¼ கப்
துவரம் பருப்பு 3 டீஸ்பூன்
கடலைப் பருப்பு (channa dal) 3 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
கருப்பு மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
நறுக்கிய இஞ்சி 1½ டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் 1 டீஸ்பூன்
நெய் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு & கறிவேப்பிலை தேவையான அளவு
செய்முறை:
அரிசி, பருப்பு வகைகள் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாய் கலந்து தண்ணீரில் ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதை நன்கு கழுவி மிக்ஸியில் சற்று கொர கொரப்பாக அரைத்தெடுக்கவும். அந்த மாவை பத்து மணிநேரம் நொதிக்க விடவும்.
ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் அதில் மிளகு, ஜீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து மணம் வரும் வரை வறுத்து தோசை மாவில் சேர்க்கவும். பின் தேவையான அளவு உப்பும், தேவைப்பட்டால் தண்ணீரும் சேர்த்து மாவை தோசைமாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து நெய் தடவி சிறிது தடிமனான தோசைகளாக சுற்றிலும் நெய் ஊற்றி சுட்டெடுக்கவும்.
கருப்பு கொண்டைக் கடலை சட்னி:
நூறு கிராம் ஊறவைத்த கொண்டைக் கடலையை வேகவைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இரண்டு பச்சை மிளகாய், கடுகு உளுத்தம் பருப்பு தலா அரை டீஸ்பூன், ஒரு துண்டு சுத்தமான புளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொண்டைக் கடலையுடன் சேர்க்கவும்.
அத்துடன் தேவையான உப்பு, தண்ணீர் மற்றும் இரண்டு டீஸ்பூன் தேங்காய்த் துருவல் சேர்த்து அரைத்தெடுக்கவும். இந்த சட்னியை தொட்டு காஞ்சிபுரம் தோசையை உட்கொள்ளும்போது கார்போஹைட்ரேட், ப்ரோட்டீன், கொழுப்பு, வைட்டமின்கள், நார்ச் சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உடலுக்குக் கிடைக்கும்.