

கோட்டே கடுபு (Kotte Kadubu):
இதுவும் கர்நாடகா ஸ்பெஷல் காலை உணவாகும். இதன் ஸ்பெஷாலிடி என்னவென்றால் தயாரிக்கப்பட்ட மாவு பலா இலைகளில் சுற்றப்பட்டு வேக வைக்கப்படுவதால் இலையின் வாசம் சுவையை அதிகரிப்பதுடன், ஆரோக்கியமானதாகவும் ஆக்குகிறது.
உளுத்தம் பருப்பு 1 கப்
இட்லி ரவை 2 கப்
உப்பு தேவையானது
பலாப்பழ இலைகள் 20
தென்னங்குச்சிகள் அல்லது டூத் பிக்
பெரியதாகவும் சீரான அளவிலும் உள்ள பலாப்பழ இலைகளை தேர்ந்தெடுத்து ஒரு கோப்பை போன்ற அமைப்பை உருவாக்க தென்னங்குச்சிகள் கொண்டு கப்புகள் போல் உருவாக்கவும். அதாவது பலா இலைகளைக்கொண்டு நம்மூர் தொன்னை போல் செய்து கொள்ளவும்.
உளுத்தம் பருப்பை கழுவி 2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு நீர் அதிகம் சேர்க்காமல் நன்கு அரைத்து எடுக்கவும் இட்லி ரவையை போதுமான அளவு தண்ணீர் விட்டு 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை கையால் நன்கு பிழிந்து இட்லி ரவையை மட்டும் எடுத்து உளுத்தம் மாவுடன் சேர்த்து கலந்து தேவையான உப்பு போட்டு 8 மணிநேரம் நொதிக்கவிடவும்.
பலா இலை கப்புகளில் இந்த இட்லி மாவை முக்கால் பதம் அளவிற்கு நிரப்பி இட்லி குக்கரில் அடுக்கி வைத்து பத்து நிமிடங்கள் ஆவியில் நன்கு வேகவிடவும். இட்லி குக்கரில் ஐந்தாறு பலா இலை தொன்னைகளை வைத்து நன்கு வெந்ததும் எடுத்து சிறிது ஆறியதும் எடுத்து பரிமாற மிகவும் ருசியான மணமான மற்றும் சத்தான கோட்டே கடுபு தயார். இதனுடன் வெங்காய கார சட்னி, இட்லி மிளகாய்ப் பொடி தோதாக இருக்கும்.
இதிலேயே உப்பிற்கு பதில் தேங்காய், வெல்லம், பலாப்பழத் துண்டுகள் சேர்த்து இனிப்பும் செய்து அசத்தலாம்.
குசுபலாக்கி அரிசி:
கர்நாடகாவின் சில பகுதிகளில் குசுபலாக்கி என்ற அரிசி வகையைப் பயன்படுத்தி குசுபலாக்கி கடுபு என்ற பெயரில் கடுபு தயாரிக்கப்படுகிறது. இது பெண்களுக்கு பிரசவத்திற்கு பிந்திய உணவாக பயன்படுத்தப்படுகிறது. இது எலும்புகளை வலுப்படுத்துவதுடன், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்தையும் வழங்குகிறது.
குசுபலாக்கி (இட்லி அரிசி) 3 கப்
அவல் 2 கப்
உளுத்தம் பருப்பு 1 கப்
உப்பு தேவையானது
பலாப்பழ இலைகள் 20
பல் குச்சிகள் அல்லது தென்னங்குச்சிகள் சிறிது
பலாப்பழ இலைகளைக் கொண்டு அச்சுகளை உருவாக்கிக் (தொன்னை) கொள்ளவும். உளுத்தம் பருப்பு, அவல் ஆகியவற்றை இரண்டு மணி நேரம் ஊறவிடவும். குசுபலாக்கியை 3 மணி நேரம் ஊற விட்டு சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். உளுத்தம் பருப்பு, அவல் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு புளிக்கவிடவும்.
பிறகு பலா இலை தொன்னைகளில் மாவை விட்டு இட்லி குக்கரில் செங்குத்தாக அடுக்கி வைத்து பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்க மிகவும் ருசியான குசுபலாக்கி தயார். இலைகளை எடுத்து, குச்சிகளையும் அகற்றி, தேங்காய் சட்னியுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். செய்துதான் பாருங்களேன்!