சாம்பார் சாதத்திற்கு இனிமே ரெஸ்ட்... ட்ரை பண்ணுங்க கர்நாடகா ஸ்பெஷல் வாங்கி பாத்!

Vangi Bhaat
Vangi Bhaat
Published on

தென்னிந்திய சமையல் என்றாலே தனிச்சுவைதான். அதிலும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்துவமான மணமும் சுவையும் கொண்ட உணவுகள் உள்ளன. அந்த வகையில், கர்நாடக சமையல் என்பது சுவையுடன் ஆரோக்கியமும் சேர்த்துச் சமைக்கப்படும் உணவுகளின் நற்செயலாகும்.

பிசி பேளபாத், அவலக்கி, சக்கர பொங்கல், மிளகு ரசம் போன்ற பலவகையான உணவுகள் கர்நாடக சமையலின் சிறப்பை பிரதிபலிக்கின்றன. இந்த வகை உணவுகளில், தனித்துவமான சுவையுடன் அனைவரையும் கவரும் வாங்கி பாத் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இது கர்நாடகாவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக மட்டுமல்லாமல், அங்கு வாழும் மக்களின் அன்றாட உணவிலும் இருக்கும். இப்போது வாங்கி பாத் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • சம்பா அரிசி – 1 கப்

  • சிறிய கத்தரிக்காய் – 4-5 (நீளமாக நறுக்கியது)

  • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

  • தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

  • பச்சை மிளகாய் – 2 (நீளமாக)

  • கறிவேப்பிலை – ஒரு கொத்து

  • கொத்தமல்லி தழை – சிறிதளவு (நறுக்கியது)

  • எண்ணெய் – 2 தேக்கரண்டி

  • நெய் – 1 தேக்கரண்டி

  • கடுகு – ½ தேக்கரண்டி

  • உளுத்தம் பருப்பு – ½ தேக்கரண்டி

  • கடலை பருப்பு – ½ தேக்கரண்டி

  • மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி

  • உப்பு – தேவையான அளவு

வாங்கி பாத் மசாலாவுக்கு:

  • வரமிளகாய் – 4-5 ( காரத்திற்கு ஏற்ப)

  • தனியா - 2 தேக்கரண்டி

  • சீரகம் – 1 தேக்கரண்டி

  • வெந்தயம் – ¼ தேக்கரண்டி

  • பட்டை – ஒரு சிறிய துண்டு

  • ஏலக்காய் – 1

  • துருவிய தேங்காய் – 2 தேக்கரண்டி

  • பொட்டுக்கடலை – 1 தேக்கரண்டி

செய்முறை:

  • வாங்கி பாத் மசாலாவுக்கான பொருட்களை தேங்காய் மற்றும் பொட்டுக்கடலை தவிர ஒரு வாணலியில் போட்டு லேசாக வறுக்கவும். நல்ல மணம் வந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிடவும். ஆறியதும் தேங்காய் மற்றும் பொட்டுக்கடலையை சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

  • சம்பா அரிசியை நன்கு கழுவி, ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் என்ற விகிதத்தில் குக்கரில் போட்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். அரிசி நன்கு வெந்து, சீராக உதிரியாய் இருக்க வேண்டும்.

  • ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.

  • கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
அடிக்கடி வரும் தலைவலி... இத்தனை வகைகளா? அசால்டா விடாதீங்க... உடனே செக் பண்ணுங்க!
Vangi Bhaat
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  • பின்பு தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும்.

  • நறுக்கிய கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். கத்தரிக்காய் நிறம் மாறாமல் இருக்க சிறிது மஞ்சள் தூள் சேர்க்கலாம்.

  • வதக்கிய கத்தரிக்காயில் அரைத்து வைத்துள்ள வாங்கி பாத் மசாலாவை சேர்த்து நன்றாக கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

  • மசாலா கத்தரிக்காயுடன் நன்றாக கலந்ததும், வேகவைத்த அரிசியை சேர்த்து மெதுவாக கிளறவும். அரிசி உடையாமல் பார்த்துக் கொள்ளவும்.

  • அடுப்பை மிதமான தீயில் வைத்து, 5-7 நிமிடங்கள் வரை கிளறி விடவும், அப்போது தான் மசாலா அரிசியுடன் நன்றாக சேரும்.

  • இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி பரிமாறலாம்.

பரிமாறும் முறைகள்:

வாங்கி பாத் தனியே சாப்பிடப் போதுமான சுவை கொண்டது. அதன் தனித்துவமான சுவையே அதற்கு போதும். இருப்பினும், இன்னும் சுவை கூட்ட விரும்புபவர்கள் சைட் டிஷ் உணவுகளுடன் பரிமாறலாம்.

  • தயிர் பச்சடி: வெங்காயம், வெள்ளரிக்காய் அல்லது கேரட் சேர்த்து தயாரிக்கும் தயிர் பச்சடி வாங்கி பாத்தின் காரத்தை குறைத்து குளிர்ச்சியான சுவையை கொடுக்கும்.

  • சிப்ஸ் அல்லது அப்பளம்: மொறுமொறுப்பான சிப்ஸ் அல்லது அப்பளம், வாங்கி பாத்துக்கு ஒரு நல்ல காம்பினேஷனாக இருக்கும்.

  • ஊறுகாய்: மாங்காய் ஊறுகாய் அல்லது எலுமிச்சை ஊறுகாய் போன்ற காரமான ஊறுகாய்கள் வாங்கி பாத்தின் சுவையை மேலும் தூண்டும்.

  • சாலட்: வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் வெங்காயம் கலந்த எளிய சாலட் ஒரு ஆரோக்கியமான தேர்வாக இருக்கும்.

கர்நாடகாவின் இந்த ஸ்பெஷல் வாங்கி பாத், அனைவருக்கும் ஒரு புதுமையான சுவை அனுபவத்தை கொடுக்கும். இனிப்பும், காரமும் கலந்த இந்த சுவை, ஒருமுறை சாப்பிட்டவர்களை மீண்டும் சாப்பிடத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிச்சயம் அனைவரும் விரும்புவார்கள்.

இதையும் படியுங்கள்:
அறிவாற்றல் மிக்கவர்களின் 5 பழக்கங்கள்!
Vangi Bhaat

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com