சுக்குட்டிக் கீரை மசியல்:
மிளகு தக்காளி, மணல் தக்காளி என்ற பெயர்களால் அழைக்கப்படும் மணத்தக்காளி கீரை கிராமங்களில் சுக்குட்டிக் கீரை என்று அழைக்கப்படுகிறது. புரதம், சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் நிறைந்த இதயத்திற்கு பலமூட்டும் சிறந்த கீரை.
சுக்குட்டிக் கீரை 1 கட்டு
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
பயத்தம் பருப்பு 1/4 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
மிளகாய் வற்றல் 2
சீரகம் 1/2 ஸ்பூன்
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்
கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை குழைவாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன் மிளகாய் வற்றல், சீரகம் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் இரண்டு கப் தண்ணீர் விட்டு அலசிய சுக்குட்டி கீரையை போட்டு மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும். நன்கு வெந்த கீரையை அரைத்த தேங்காயுடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து கடுகு பொரிந்ததும் அரைத்த கீரையில் சேர்க்கவும். தேவையான உப்பு, வெந்த பயத்தம் பருப்பை மசித்து சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். மிகவும் ருசியான சுக்குட்டி கீரை மசியல் தயார்.
புடலங்காய் பொரியல்:
புடலங்காய் 1
பயத்தம் பருப்பு 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
பச்சை மிளகாய் 1
சீரகம் 1/2 ஸ்பூன்
உப்பு சிறிது
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல்1, கறிவேப்பிலை சிறிது, எண்ணெய் 2 ஸ்பூன்
புடலங்காயை மெல்லிய பிறை வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொண்டு உள்ளிருக்கும் விதை மற்றும் சதைப் பற்றை நீக்கிவிடவும். பயத்தம் பருப்பை 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு எண்ணெய் விட்டு கடுகு பொரிந்ததும் ஊறிய பயத்தம் பருப்பு மற்றும் நறுக்கிய புடலங்காயை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கிளறி தட்டை போட்டு மூடி விடவும். மிதமான தீயில் வேகட்டும். பயத்தம் பருப்பு நன்கு வெந்து மலர்ந்ததும் பொடித்த தேங்காய்த் துருவலை சேர்த்து பெருங்காயத்தூள் போட்டு கலந்து விட ருசியான புடலங்காய் பொரியல் தயார்.