இயற்கை வளங்கள் நிறைந்த கேரளாவில், சுவையான உணவுகளுக்கும் பஞ்சமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அத்தகைய சுவையான உணவுகளில் கடலைக் கறி கேரளாவில் பிரபலமான உணவாகும். கேரளாவுக்கே உரித்தான பாரம்பரிய முறையில் செய்யப்படும் இதன் மசாலா மற்றும் தேங்காய் கலவையில், கருப்பு கொண்டைக்கடலை சேர்த்து செய்யப்படுவதால், ஒரு அட்டகாசமான சுவையை இதற்குக் கொடுக்கிறது. சரி வாருங்கள் இந்த பதிவில் கேரளா கடலைக் கறி எப்படி செய்வது எனத் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
1 கப் கருப்பு கொண்டைக் கடலை
2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
1 தேக்கரண்டி கடுகு
1 தேக்கரண்டி சீரகம்
1 பெரிய வெங்காயம்
3 பச்சை மிளகாய்
1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்
2 தக்காளி
ஒரு கொத்து கருவேப்பிலை
1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்
1 தேக்கரண்டி கரம் மசாலா
சுவைக்கு உப்பு
இரண்டு கப் தண்ணீர்
கொத்தமல்லித் தழை சிறிதளவு
தேங்காய் விழுது தயாரிக்க:
1 கப் துருவிய தேங்காய்
1 ஸ்பூன் சோம்பு
2 வெங்காயம்
1 இலவங்கப்பட்டை
3 கிராம்பு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரம் அல்லது பிரஷர் குக்கரில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
இப்போது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை ஒரு நிமிடம் வதக்கவும். அடுத்ததாக தக்காளி மற்றும் கருவேப்பிலை சேர்த்து தக்காளி வேகும் வரை சமைக்க வேண்டும். தக்காளி வெந்ததும் மிளகாய் தூள், கொத்தமல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து விடுங்கள்.
அடுத்ததாக, முதல் நாள் இரவே ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையை கடாயில் சேர்த்து, மசாலா கலவையுடன் நன்கு கிளறி விடுங்கள். பின்னர் போதிய அளவு தண்ணீர் ஊற்றி கடாயை மூடி, அரை வெப்பத்தில் 15 நிமிடங்கள் வேக விடுங்கள். பிரஷர் குக்கர் பயன்படுத்துகிறீர்கள் என்றால் சுமார் 5-6 விசில் விட்டால் போதும்.
குக்கரில் கடலை வெந்து கொண்டிருக்கும்போதே தேங்காய் விழுதைத் தயாரிக்க, ஒரு மிக்ஸியில் துருவிய தேங்காய், சோம்பு, வெங்காயம், லவங்கப்பட்டை மற்றும் கிராம்பு ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள்.
கொண்டைக்கடலை வெந்ததும் தேங்காய் விழுதை அதில் சேர்த்து, மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். இந்த சமயத்தில் நீங்கள் விரும்பினால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது உப்பு மற்றும் மசாலா சரிபார்த்து கொஞ்ச நேரம் அப்படியே கொதிக்கவிடுங்கள்.
இறுதியாக கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு வந்ததும், கொத்தமல்லித் தழையை மேலே தூவி இறக்கினால், கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி தயார். இது சாதம், அப்பம், புட்டு ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட வேற லெவல் சுவையில் இருக்கும்.