குழந்தைகளுக்கேற்ற மாலை நேர ஸ்நாக்ஸ்!

குழந்தைகளுக்கேற்ற மாலை நேர ஸ்நாக்ஸ்!
Published on

ள்ளிகள் விடுமுறையில் வீட்ல குழந்தைகளை சமாளிப்பது ஒரு புறம் என்றால் சாப்பிட என்ன செய்து தருவது என்ற குழப்பம் மறுபுறம் வரும் நம் அம்மாக்களுக்கு. தினம் இட்லி தோசை டிபன் தானா என யோசித்து என்ன செய்வது என குழப்பம் ஏற்படும். அதற்கு சில யோசனைகள். குழந்தைகளும் ஏன் பெரியவர்களும் கூட மிக விரும்பி சாப்பிடுவார்கள். நமக்கும் செய்ய சுலபமாக இருக்கும். சுட சுட இஞ்சி டீயுடன் இந்த ஸ்நாக்ஸ் வகைகளை தினம் ஒன்றாக செய்து கொடுக்கலாம்.

மெதுவடை:

ன்ன மெதுவடையா? யார் உளுந்தை ஊறப்போட்டு அரைத்து வடை தட்டுவது என்று சலிப்பாக உள்ளதா. கவலை வேண்டாம். வீட்டில் எப்படியும் இட்லி மாவு வைத்திருப்போம் அல்லவா. அதில் ஒரு கப் எடுத்து ரெண்டு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் ரவை சேர்த்து கலந்து விடவும். அத்துடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், பெருங்காயத்தூள் அரை ஸ்பூன் சேர்த்து கலந்து வடையாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்க மொறுமொறுப்பான மெதுவடை தயார்.

கீரை வடை:

கையிருப்பில் உள்ள இட்லி மாவைக் கொண்டு விதவிதமான ரெசிபிஸ் செய்து கொடுக்கலாம். உளுந்து உடலுக்கு மிகவும் நல்லது. ஒரு நாள் ஏதேனும் ஒரு கீரையை பொடியாக நறுக்கி உப்பு, காரப்பொடி அல்லது பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், ஒரு கப் இட்லி மாவு, இரண்டு ஸ்பூன் அரிசி மாவுடன் கலந்து கீரை வடையாக செய்து கொடுக்கலாம்.

குணுக்கு:

ரு கப் இட்லி மாவுடன் ரெண்டு ஸ்பூன் ரவை, அரிசி மாவு 2 ஸ்பூன், உப்பு, காரப்பொடி பெருங்காயம், கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் மாவை கையால் கிள்ளி போட குணுக்கு தயார். தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

மெது பக்கோடா:

ரு கப் இட்லி மாவுடன் ரெண்டு ஸ்பூன் அரிசி மாவு, 4 ஸ்பூன் கடலை மாவு, உப்பு, காரப்பொடி, கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து பிசைந்து எண்ணையில் கையால் உதிர்த்து விட தூள் பக்கோடா ரெடி. ருசியாக இருக்கும்.

வெஜிடபிள் போண்டா:

காலையில் செய்த பொரியல் முந்து விட்டதா? ஜாலிதான். அத்துடன் தக்காளி சாஸ் சிறிது, காரப்பொடி சிறிது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கையால் நன்கு பிசைந்து எலுமிச்சம் பழ சைஸ் உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு சின்ன கப் கடலை மாவில் உப்பு, காரப்பொடி, பெருங்காயத்தூள், அரிசி மாவு சிறிது சேர்த்து கெட்டியாக இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் சமையல் சோடா அரை ஸ்பூன் சேர்க்கலாம். அதில் இந்த பிடித்து வைத்துள்ள வெஜிடபிள் உருண்டைகளை பிரட்டி எண்ணெ நன்கு காய்ந்ததும் போட்டு பொரித்து எடுக்க சூப்பரான வெஜிடபிள் போண்டா தயார்.

இரண்டு நாள் எண்ணெயில் பொரித்த பண்டங்கள் கொடுத்தால், அடுத்த இரண்டு நாட்கள் பிரட் சாண்ட்விச், ஆவியில் வேகவைத்த இடியாப்பம், குழாப்புட்டு, இட்லி, வெஜிடபிள் சாலட் (தக்காளி, வெள்ளரி, வெங்காயம், கேரட், உப்பு, எலுமிச்சைசாறு, மிளகுத்தூள் கலந்த கலவை) , ஃப்ரூட் சாலட் (வாழைப்பழம் ,ஆரஞ்சு சுளைகள், கொய்யா, ஆப்பிள், சப்போட்டா, மாம்பழ துண்டுகள், இரண்டு சிமிட் உப்பு, தேன், மிளகுத்தூள் கலந்த கலவை) என கொடுத்து அசத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com