
சீக்கிரம் சமைப்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் குக்கர். ஆனால், அந்த குக்கரிலேயே பிரச்சனை வருவதால் மக்கள் தினசரி தவித்து வருகின்றனர்.
நவீன காலத்தில் சமைப்பதற்காக குக்கரை தான் அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். குக்கர் இல்லாத வீடு என்பதே இல்லை. சாதம், பருப்பு என மணிகணக்கில் வேக கூடியவைகளை சீக்கிரமாக வேக வைத்து தருவது தான் குக்கர். இந்த குக்கரில் அடிக்கடி தண்ணீர் வெளியேறுவதும், அதனால் சாதமோ, பருப்போ பிடித்து விடுவதும் தான் பலரின் பிரச்சனையாக உள்ளது. இதற்கு தீர்வு தான் என்னவென தெரியாமல் பலரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
அருகிலேயே நின்று சமைக்க தேவையில்லாத ஒன்று குக்கர். தேவையான பொருட்களை உள்ளே போட்டு விட்டு தங்களது வேலைகளை சுலபமாக செய்யலாம். விசில் சத்தம் கேட்டு அடுப்பை அணைத்தால் மட்டும் போதுமானதாகும். ஆனால் இந்த குக்கரில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால் சரியாக விசிலும் வராது, சாதமும் அடி பிடித்துவிடும் சூழலும் உருவாகிறது. இதனை தடுக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
முதலில் விசில் சுத்தமாக உள்ளதா என்று சரி பார்க்கவும். பலரும் குக்கர் மூடியை சுத்தம் செய்யும் போது விசிலை சுத்தம் செய்ய மறந்து விடுவார்கள். அதனால் கூட தண்ணீர் வெளியேறலாம். சிலரின் குக்கர் விசிலை பார்த்தால் துரு கரையுடன் இருக்கும். அதனால் விசிலை நன்கு சுத்தம் செய்துவிட்டால், தண்ணீர் வெளியேறுவதை தவிர்க்கலாம்.
இதையடுத்து கேஸ்கட்டை சரிபார்க்கவும், குக்கர் மூடியில் உள்ள குக்கர் ரப்பரை சரியாக போடவும். மேலும் அது நல்ல முறையில் இருக்கிறதா என்றும் பார்க்கவேண்டும். ரப்பரின் தன்மை போய்விட்டால் கூட தண்ணீர் அடிக்கடி வெளியேறும்.
எப்போதும் குக்கரை குளிர்ந்த நீரிலே கழுவுங்கள். ஏற்கனவே குக்கர் அடுப்பில் சூடாக இருந்ததால், தண்ணீர் எப்போதும் குளிர்ச்சியாக தான் இருக்க வேண்டும்.
குக்கரில் வேக வைக்கும் போதும் சரியான அளவில் தண்ணீர் பார்த்து ஊற்ற வேண்டும். அதிகமாக இருந்தால் கூட தண்ணீர் கசிந்து கொண்டே தான் இருக்கும்.