நாம் நம் காலை உணவாக இட்லி, தோசை, பூரி, பொங்கல் என வித விதமான டிபன் வகைகளை செய்து உண்டு வருகிறோம். தோசையில் மசால் தோசை, மஷ்ரூம் தோசை, கோபி மசால் தோசை, பன்னீர் தோசை என பலவற்றை ருசித்திருக்கிறோம். ஆனால் பன் தோசை கேள்விப்பட்டிருக்கீங்களா என்றால் பலர் 'இல்லை' என்றே பதிலளிக்கக்கூடும். இப்பதிவில் பன் தோசை எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு 1 கப்
உளுந்து மாவு ¼ கப்
மைதா மாவு ¼ கப்
சர்க்கரை ¼ கப்
தயிர் ½ கப்
பேக்கிங் சோடா ½ டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தண்ணீர் - தேவைக்கேற்ப
நெய் அல்லது எண்ணெய் - தேவையான அளவு.
தேங்காய் துருவல் ¼ கப்
ஏலக்காய் பவுடர் ½ டீஸ்பூன்.
செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசிமாவு, உளுந்துமாவு, மைதா மாவு, சர்க்கரை, தயிர் ஆகியவற்றைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்து மூன்று மணிநேரம் மூடி வைத்துவிடவும். பின் அதில் உப்பு, பேக்கிங் சோடா, தேங்காய் துருவல், ஏலக்காய் பவுடர் சேர்த்துக் கலக்கவும். பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து, நெய் அல்லது எண்ணெய் தடவவும். அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி சிறு தீயில் வேகவிடவும்.
ஒரு மூடியால் மூடி வைத்து ஒரு நிமிடம் வெந்தபின் திருப்பிப் போட்டு பொன் நிறம் வந்ததும் பேன்கேக் போன்ற உருவமுள்ள பன் தோசையை எடுத்து தட்டில் வைக்கவும். தேங்காய் சட்னி அல்லது பிடித்தமான வேறு வகை சட்னி அல்லது 'டிப்' தொட்டு உண்ணவும்.
தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் பவுடர் சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் அதை சேர்க்காமலே இந்த பன் தோசையை சுட்டு சாப்பிடலாம். ஊட்டச்சத்து நிறைந்த இந்த பன் தோசையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர் என்பதில் சந்தேகம் இல்லை.