"ஹோட்டல் சாப்பாடு என் உடலுக்கு ஒத்துக்காது. வீட்டிலேயே சமைத்து சாப்பிட வேண்டும். அதுவும் உடனடியாக சமைக்க வேண்டும்" என நினைப்பவர்கள் இந்த கொங்கு நாட்டு பருப்பு சாதத்தை முயற்சித்துப் பாருங்கள். வெறும் அரை மணி நேரத்தில் ஆவி பறக்க சுட சுட ஒரு சுவையான உணவை ருசித்து சாப்பிடலாம். அதுவும் உடலுக்கு ஆரோக்கியமான ரெசிபி இதுதான்.
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 100 கிராம்
அரிசி - ¼ கிலோ
பட்டை - 2
கிராம்பு - 2
சீரகம் - 1 ஸ்பூன்
கடுகு - ½ ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ½ ஸ்பூன்
தேங்காய் - 4 துண்டு
பூண்டு - 5 பல்
தக்காளி - 2
வெங்காயம் - 2
வர மிளகாய் - 4
பச்சை மிளகாய் - 2
கருவேப்பிலை - 2
கொத்தமல்லி தழை - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
கடலை எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு கடலெண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு தாளிக்கவும். அடுத்ததாக சோம்பு, சீரகம், பட்டை, உளுத்தம் பருப்பு சேர்த்து வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் வரமிளகாய், பச்சை மிளகாய், தக்காளி மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் அதில் துவரம் பருப்பு சேர்த்து பாதி அளவுக்கு வேக விடவும். அதன் பிறகு அரிசி, உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும். சில நிமிடங்களுக்குப் பிறகு பூண்டு, சீரகம், தேங்காய் சேர்த்து தண்ணீர் நன்றாக வற்றும்வரை கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்றாக வற்றியதும் சாதம் வெந்திருக்கும். இதில் சிறிதளவு கொத்தமல்லி, நெய் சேர்த்து மூடி வைத்தால் சுவையான கொங்கு பருப்பு சாதம் ரெடி.