

கொங்கு ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம்
தேவையான பொருட்கள்:
சாப்பாட்டு அரிசி – 2 டம்ளர்
துவரம் பருப்பு – ½ டம்ளர்
பாசி பருப்பு – ¼ டம்ளர்
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி
மிளகாய் வற்றல் – 5
கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
பட்டை – 2 துண்டு
சோம்பு – 1 டீஸ்பூன்
கசகசா – ¼ டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
தக்காளி – 2
இஞ்சி 1 துண்டு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பட்டை, சோம்பு, கசகசா, சீரகம், வரமிளகாய், இஞ்சி,பூண்டு, கருவேப்பிலை ஆகியவற்றை எடுத்து அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு நன்கு மைய அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி, ஒரு பட்டை போட்டு தாளிக்கவும். அதன் பிறகு சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு மசியும் வரை வதங்கியதும், அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், அரிசி மற்றும் பருப்பு கலவையை தண்ணீரில் கழுவி விட்டு சேர்த்து நன்கு கிளறி, குக்கரை மூடி மூன்று விசில் வரும்வரை வேகவைக்கவும்.
மூன்று விசில் வந்ததும் அடுப்பை ஆப் செய்து, சிறிது நேரம் கழித்து குக்கரை திறக்கவும். சாதத்தை மெதுவாக கிளறி, கொத்தமல்லித்தழை தூவி சூடாக பரிமாறவும்.
இந்த கொங்கு ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம், இஞ்சி ஊறுகாய் அல்லது மாங்கா தொக்குடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
