

கொங்கு மண்டலம் சைவ அசைவ உணவுகளுக்கு மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இங்கு சுமார் எட்டுநூறுக்கும் மேற்பட்ட வகை வகையான பிரத்யேக உணவுகள் உள்ளதாக கூறப்படுகிறது.
உணவு என்றால் அசைவ உணவு மட்டுமே சுவையாக இருக்கும் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. ஆனால் உண்மையில் சொல்லப்போனால் பல சைவ உணவுகள் அபார சுவை மிக்கவை. விதவிதமாக உணவுகளை சாப்பிட்டு அசத்த வேண்டும் என்றால் அதற்கு சைவ உணவே பெஸ்ட் சாய்ஸ். உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்காதவை சைவ உணவுகளே.
கொங்கு மண்டலத்தின் மிகவும் பிரபலமான உணவு அரிசி பருப்பு சாதம். அரிசி மற்றும் துவரம்பருப்பு இரண்டையும் சேர்த்து அதனுடன் சிறிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்து சமைக்கப்படும் சுவையான சத்தான ஒரு மதிய உணவாகும். இந்த அரிசி பருப்பு சாதத்துடன் நெய் சேர்த்து பரிமாறப்படும்போது அதன் சுவை அபாரமாக இருக்கும். எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது. இன்னும் கொஞ்சம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே தோன்றும். மேலும் இது உடலுக்கு தீங்கு செய்யாத ஒரு உணவு.
அரிசி பருப்பு சாதம் செய்யத் தேவையான பொருட்கள்:
பச்சரிசி அல்லது கைக்குத்தல் அரிசி - 1 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
நறுக்கிய சிறியவெங்காயம் – 20 எண்ணிக்கை
பூண்டு – ஒரு கைப்பிடி
தக்காளி – நான்கு
காய்ந்த மிளகாய் - 5
பச்சை மிளகாய் - 2
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
நெய் - சிறிதளவு
செய்முறை:
அரிசி மற்றும் துவரம்பருப்பை நன்றாகக் கழுவி சுமார் அரை மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
குக்கர் சூடானதும் எண்ணெய்யை ஊற்றி அதில் கடுகு, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய், கறிவேப்பிலை முதலானவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.
நறுக்கிய சிறிய வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் அதனுடன் தக்காளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி நன்கு குழையும் வரை வதக்கவும்.
ஊறவைத்த அரிசி மற்றும் துவரம்பருப்பை மூன்று கப் தண்ணீர் மற்றும் உப்பைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
குக்கரை மூடி தீயில் வைத்து மூன்று அல்லது நான்கு விசில்கள் வரும்வரை வேகவைக்கவும். சற்று நேரம் கழித்து குக்கரைத் திறந்து அதில் சிறிதளவு நெய்யை ஊற்றி பதமாகக் கிளறிப் பரிமாறவும்.
சூடான சுவையான அரிசி பருப்பு சாதம் தயாராகிவிட்டது. காஞ்சிபுரம் செங்கற்பட்டு மாவட்டங்களில் இதை துவரம்பருப்பு கிச்சடி என்ற பெயரில் தயாரிக்கிறார்கள்.