

ஆரோக்கிய குழம்பு:
காய்கறி இல்லாமலே கூட ஆரோக்கியமான குழம்பு செய்யலாம். மழை மற்றும் குளிர்காலங்களுக்கு ஏற்ற, மிளகுக்குழம்பு செய்வதும் சுலபம். அத்துடன் சளி இருமலுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கவும் செய்யும். காய்கறி இல்லாத நேரத்தில் வாய்க்கு ருசியாக சட்டென்று பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம்.
தனியா 1 ஸ்பூன்
மிளகு 1 ஸ்பூன்
மிளகாய் 2
கடலைப்பருப்பு 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன்
வெந்தயம் 1/4 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை 2 ஆர்க்கு
புளி எலுமிச்சை அளவு
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
வெல்லம் சிறு துண்டு
பூண்டு விருப்பப்பட்டால்
வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய், வெந்தயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுக்கவும். புளியை நீர் விட்டு நீர்க்க கரைத்துக்கொள்ளவும். பூண்டை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை போட்டு கடுகு பொரிந்ததும், பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டை சேர்த்து வதக்கவும். அதில் நீர்க்க கரைத்து வைத்துள்ள புளியை சேர்த்து தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து புளி வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.
வறுத்து வைத்துள்ள மசாலா பொருட்களை மிக்ஸியில் சேர்த்து விழுதாக இல்லாமல் சற்று கொரகொரப்பாக பொடித்தெடுக்கவும். புளி வாசனை போனதும் பொடித்து வைத்துள்ள பொடியில் சிறிது நீரை சேர்த்து நன்கு கலந்து, கொதிக்கும் புளித்தண்ணீரில் விட்டு கொதிக்கவிடவும். கடைசியாக சிறு துண்டு வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். இதனை சூடான சாதத்தில் பிசைந்து சுட்ட அப்பளத்துடன் சாப்பிட அமிர்தமாக இருக்கும். நல்லெண்ணையின் வாசனையும், கருவேப்பிலையின் மணமும் அசத்தலாக இருக்கும்.
சளி, இருமலுக்கு நிவாரணம் அளிக்கும் இந்த குழம்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனை மருந்துக் குழம்பு என்று கூட சொல்லலாம். பூண்டு விரும்பாதவர்கள் சுண்டைக்காய் வற்றலை நல்லெண்ணையில் வறுத்து சேர்க்கலாம். கடைசியாக ஒரு துண்டு வெல்லம் சேர்ப்பது குழம்பின் ருசியைக் கூட்ட உதவும். செய்துதான் பாருங்களேன் இந்தக் குழம்பை! இனி வீட்டில் காய்கறி இருந்தாலும் இதனை அடிக்கடி செய்து சுவைப்பீர்கள்!