
தஞ்சாவூர் கும்பகோணம் பகுதியில் இட்லி, தோசை, பூரி, ஊத்தப்பம், சப்பாத்தி என்றாலே இந்த கடப்பா தான் செய்து அசத்துவார்கள். செய்வதும் எளிது ருசியும் அபாரமாக இருக்கும். சிலர் காய்கறிகள் சேர்த்துக் கூட கடப்பா செய்வார்கள். தேங்காயுடன் அரைக்கும் பொழுது சிலர் முந்திரிப்பருப்பு அல்லது கசகசாவை சேர்த்து அரைப்பார்கள். இது அவரவர் விருப்பம். ஆனால் பொதுவாக கும்பகோணம் கடப்பா என்றால் இந்த முறையில் தான் செய்வது வழக்கம். கும்பகோணம், தஞ்சாவூர் பகுதியில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் இது பரிமாறப்படுகிறது.
தேவையானவை:
பயத்தம் பருப்பு - 1 கப்
உருளைக்கிழங்கு - 1
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 1
தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 ஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்
உப்பு - தேவையானது
சோம்பு - 1/2 ஸ்பூன்
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 1
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
வெங்காயம், 1 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய்த் துருவல், பொட்டுக்கடலை, பூண்டு பற்கள், 3 பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து நன்கு அரைத்து வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக நறுக்கவும். குக்கரில் 11/2 கப் தண்ணீர் விட்டு பயத்தம் பருப்பு, நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து மூன்று விசில் விட்டு எடுக்கவும்.
வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு போட்டு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அத்துடன் தக்காளியையும் போட்டு நன்கு வதக்கி அதில் வேக வைத்த பயத்தம் பருப்பு, உருளைக்கிழங்கை சேர்த்து தேவையான உப்பையும் போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.
நன்கு கொதிக்கும் பொழுது அரைத்து வைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து ரெண்டு கொதி விடவும். அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்க மிகவும் ருசியான இட்லி தோசைக்கு தோதான கும்பகோணம் கடப்பா தயார்.
செய்துதான் பாருங்களேன் இந்த கும்பகோணம் கடப்பாவை!