
நம் உடல் முழு ஆரோக்கியத்துடன் திகழ பல வகையான ஊட்டச் சத்துக்கள் தேவை. அவற்றை நாம் வெவ்வேறு வகையான தாவர உணவுகள் மற்றும் நான்வெஜிட்டேரியன் உணவுகள் மூலமும் பெற்று வருகிறோம். ப்ரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பாசிப் பயறுடன் தண்டுக்கீரை சேர்த்து ஆரோக்கியம் நிறைந்த கிரேவி செய்வது எப்படி என்று இப்பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தோலுடன் கூடிய பாசிப் பயறு 1 டேபிள் ஸ்பூன்
தண்டுக்கீரை இலைகள் ஒரு கைப்பிடி
நறுக்கிய தக்காளி 1
பச்சை வேர்க்கடலைப் பருப்பு 3 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் 1
சிவப்பு மிளகாய் 2
தேங்காய் துருவல் 2 டீஸ்பூன்
சீரகம் ½ டீஸ்பூன்
எண்ணெய் 4 டீஸ்பூன்
கடுகு ½ டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு ¼ டீஸ்பூன்
மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை 1 இணுக்கு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பாசிப்பயறு வேர்க்கடலைப் பருப்பு மற்றும் தக்காளி சேர்த்து வேகவைக்கவும். அவை முக்கால் பாகம் வெந்திருக்கும் போது கீரை இலைகளை சுத்தப்படுத்தி நறுக்கி அதனுடன் சேர்க்கவும். பயறு நன்கு வெந்து குழையும் தருவாயில் அடுப்பை அணைத்துவிடவும்.
தேங்காய், சீரகம் மற்றும் சிவப்பு மிளகாயை மிக்ஸியில் அரைத்துப் பேஸ்ட்டாக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை சேர்த்துப் பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிவந்தவுடன் அதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் போட்டு கொதிக்க விடவும். கொதிக்கும்போது அரைத்து வைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து கிளறிவிடவும். அதில் வேகவைத்த பாசிப்பயறு கலவையை சேர்க்கவும். அனைத்தும் ஒன்று சேர்ந்து கிரேவி பதம் வந்ததும் இறக்கிவிடவும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்.
ரொட்டிக்கு தொட்டுக்கொள்ளவும் ஏற்ற சைட் டிஷ் இது. சாப்பிடும்போது க்ரெஞ்சியான வேர்க்கடலை பருப்பை மென்று சாப்பிடுவது தனி ருசி.இந்த கிரேவியிலிருந்து கிடைக்கும் ப்ரோட்டீன், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து வைட்டமின்கள் போன்றவை ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் அளிப்பவை.