இன்னைக்கு வீட்டிலேயே சுவையான அவல் கேசரியும், மஷ்ரூம் சட்னியும் எப்படி எளிமையாக செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க.
அவல் கேசரி செய்ய தேவையான பொருட்கள்:
முந்திரி-10
திராட்சை-10
அவல்-1கப்.
வெல்லம்-1கப்.
ஏலக்காய் தூள்-1தேக்கரண்டி.
உப்பு-1 சிட்டிகை.
நெய்-தேவையான அளவு.
அவல் கேசரி செய்முறை விளக்கம்:
முதலில் ஃபேனில் நெய் 4 தேக்கரண்டி விட்டு முந்திரி10, திராட்சை 10 வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அதே ஃபேனில் கெட்டி அவல் 1கப் சேர்த்து நன்றாக வறுத்தெடுத்து மிக்ஸியில் போட்டு ரவை போல அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது ஃபேனில் 2 ½ கப் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் ஏலக்காய்தூள் 1 தேக்கரண்டி, உப்பு 1 சிட்டிகை சேர்த்துவிட்டு அரைத்து வைத்த அவலை சேர்த்து நன்றாக வேகவிடவும். அவல் நன்றாக வெந்ததும், வெல்லம் 1 கப் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு நெய் 2 தேக்கரண்டி சேர்த்து அத்துடன் வறுத்து வைத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிண்டி இறக்கினால் அவல் கேசரி தயார். இந்த சூப்பர் சுவையான ரெசிபியை நீங்களும் வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
மஷ்ரூம் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
மஷ்ரூம்-200 கிராம்.
வெங்காயம்-1கப்.
வரமிளகாய்-5
எண்ணெய்-1 குழிக்கரண்டி.
பூண்டு-4
இஞ்சி-1துண்டு.
புளி-சிறிதளவு.
உப்பு- தேவையான அளவு.
தேங்காய்-1கப்.
தாளிப்பதற்கு,
எண்ணெய்-2 தேக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
பெருங்காயத்தூள்-1/2 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதளவு.
மஷ்ரூம் சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் 200 கிராம் மஷ்ரூமை நன்றாக தண்ணீரில் அலசிவிட்டு வெட்டி வைத்துக் கொள்ளவும்.
இப்போது கடாயில் 1 குழிக்கரண்டி எண்ணெய் சேர்த்து 5 வரமிளகாய், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் 1 கப் சேர்த்து வதக்கவும். இப்போது வெட்டி வைத்திருக்கும் மஷ்ரூமை சேர்த்து கிண்டவும். இத்துடன் பூண்டு 4, இஞ்சி 1 துண்டு, புளி சிறிது சேர்த்து நன்றாக வதக்கவும். இந்த கலவை நன்றாக வதங்கியதும், தேவையான அளவு கல் உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். இப்போது இது ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து கூட 1 கப் தேங்காய் வைத்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி,உளுந்து 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் ½ தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்றாக பொரிந்ததும் தாளிப்பை சட்னியில் சேர்த்து கிண்டிவிட்டால், சுவையான மஷ்ரூம் சட்னி தயார். இதை இட்லி, தோசை, சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் சுவை அல்டிமேட்டாக இருக்கும். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.