
வீட்ல கொஞ்சம் ஜவ்வரிசி இருந்தா போதும். இந்த அப்பத்தை செஞ்சு கொடுங்க. குழந்தைங்க இன்னும் கொஞ்சம் வேணும் வேணும் என்று கேட்டு கேட்டு சாப்பிடு வார்கள். வெல்லம் சேர்ப்பதால் இரும்புச்சத்துடன் சுவையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - ஒரு கப்
பச்சரிசி - ஒரு கப்
வெள்ளை உளுந்து - கால் கப்
ஜவ்வரிசி- கால் கப்
வெந்தயம் -கால் டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்
துருவிய வெல்லம் - இரண்டு கப்
துருவிய தேங்காய்- கால் கப்
ஏலப்பொடி - ஒரு சிட்டிகை
எண்ணெய்- பொறிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
ஜவ்வரிசியை நன்கு கழுவி தனியே ஊற வைக்கவும். அரிசி பருப்புகள் வெந்தயம் இவற்றை சேர்த்து ஊற வைத்து ஒரு மணி நேரம் ஊறியதும் ஜவ்வரிசியுடன் சேர்த்து அனைத்தையும் நைசாக (கெட்டியாக) அரைக்கவும். மாவு எடுக்கும் முன் தூளாக்கிய வெல்லம் , தேங்காய் துருவலையும் சேர்த்து அரைத்து எடுத்து ஏலப்பொடி சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.
ஒரு அகன்ற வாணலியில் அப்பம் ஊற்றி எடுக்கும் அளவுக்கு எண்ணெய் உற்றிக் காய்ந்ததும், ஒரு குழி கரண்டியில் மாவை எடுத்து எண்ணையின் மத்தியில் ஊற்றவும். நிமிடத்தில் மேலே எழும்பி அப்பம் வந்தவுடன் வலை கரண்டியால் திருப்பி போட்டு இரண்டாவது பக்கமும் சிவந்ததும் எடுத்து வடித்தட்டில் போடவும்.
ஆறியதும் எடுத்து ருசிக்கலாம். இந்த சுவையான ஜவ்வரிசி அப்பம் மேலும் சுவை கூட தேவைப்பட்டால் ஒரு வாழைப்பழத்தை மாவில் சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பு - அப்பத்துக்கு மாவு அரைக்கும் போது அதிக நீர் விடக்கூடாது வெல்லமே போதும்.