
இன்றைக்கு சுவையான கொள்ளு இட்லி உப்புமா மற்றும் வல்லாரைக்கீரை கடையல் ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
கொள்ளு இட்லி உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:
கொள்ளு-1 டம்ளர்.
எண்ணெய்-5 தேக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதளவு.
இஞ்சி-1 துண்டு.
வரமிளகாய்-3
உப்பு-தேவையான அளவு.
கொத்தமல்லி-சிறிதளவு.
கொள்ளு இட்லி உப்புமா செய்முறை விளக்கம்;
முதலில் 1 டம்ளர் கொள்ளு எடுத்து நன்றாக கழுவி விட்டு கொஞ்சம் தண்ணீர்விட்டு 6 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது இதை கிரைண்டரில் தண்ணீர் இல்லாமல் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் விட்டுக் கொள்ளலாம். நன்றாக மாவு அரைந்ததும் அதை இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது இட்லி நன்றாக ஆறியதும் அதை கைகளாலேயே பொடித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் 5 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, வரமிளகாய் 3, கருவேப்பிலை சிறிதளவு, இஞ்சி பொடியாக நறுக்கியது 1 துண்டு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும். இப்போது பொடித்து வைத்திருக்கும் இட்லியை இதில் சேர்த்துவிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். கடைசியாக, கொத்தமல்லி சிறிதளவு, தேங்காய் துருவல் 1 கைப்பிடி சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கொள்ளு இட்லி உப்புமா தயார். உடல் எடைக் குறைக்க நினைப்பவர்கள் இந்த சூப்பர் ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.
வல்லாரைக்கீரை கடையல் செய்ய தேவையான பொருட்கள்;
துவரைப்பருப்பு-1கப்.
வெங்காயம்-1
தக்காளி-1
பெருங்காயம்-1 துண்டு.
பூண்டு-10
பச்சை மிளகாய்-5
மஞ்சள் தூள்-சிறிதளவு.
வல்லாரைக்கீரை-1கட்டு.
புளி- பாதி எழுமிச்சை அளவு.
கல் உப்பு-தேவையான அளவு.
தாளிக்க,
எண்ணெய்-சிறிதளவு.
வரமிளகாய்-5
கடுகு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதளவு.
வல்லாரைக்கீரை கடையல் செய்முறை விளக்கம்;
முதலில் 1 கப் துவரைப்பருப்பு, நறுக்கிய வெங்காயம் 1, நறுக்கிய தக்காளி 1, கட்டு பெருங்காயம் 1 துண்டு, பூண்டு 10, பச்சை மிளகாய் 5, மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து குக்கரில் 4 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
வல்லாரைக்கீரையை சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். கடாயில் வேகவைத்த பருப்பை சேர்த்து அத்துடன் நறுக்கிய வல்லாரைக்கீரையையும் சேர்த்து கலந்து விடவும். இதில் பாதி எழுமிச்சை அளவு புளி, கல் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக மசித்து விடவும்.
இப்போது ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வரமிளகாய் 5, கடுகு1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து தாளித்து கீரை கடையலுடன் சேர்த்து கலந்துவிட்டு பரிமாறவும். வல்லாரைக்கீரை நியாபக சக்தியை அதிகரிக்க உதவும். குழந்தைகளுக்கு இந்த ரெசிபியை அடிக்கடி செய்து தருவது நல்லது. நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.