கொங்குநாடு பக்கம் போனால் சந்தகை உணவு மிகவும் பிரபலம். கல்யாணம் ஆன புது தம்பதிகளுக்கு பெண் வீட்டார் பக்கத்திலிருந்து செய்து தரப்படும் முதல் உணவு சந்தகையாகும். நூடுல்ஸ் வேண்டும் என்று அடம் பிடிக்கும் குழந்தைக்கு சந்தகை செய்து கொடுப்பது மிகவும் ஆரோக்கியமாகும். சந்தகை வேகவைத்து செய்யப்படும் உணவு வகை என்பதால் எளிதில் ஜீரணமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த சந்தகையை எப்படி செய்யறதுன்னு பாக்கலாம் வாங்க.
சந்தகை செய்ய தேவையான பொருட்கள்;
அரிசி-1 கிலோ.
நல்லெண்ணெய்- 4 தக்கரண்டி.
கடுகு-2 தேக்கரண்டி.
உளுந்து-2 தேக்கரண்டி.
கடலை-2 தேக்கரண்டி.
உப்பு – தேவையான அளவு.
கருவேப்பிலை-தேவையான அளவு.
கொத்தமல்லி- தேவையான அளவு.
பச்சை மிளகாய்-2
வெங்காயம்-2
தேங்காய்-1கப்.
சந்தகை செய்முறை விளக்கம்;
முதலில் 1 கிலோ அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்த பிறகு இட்லி பதத்திற்கு நன்றாக அரைத்து கொள்ளவும். இப்போது இட்லி பாத்திரத்தில் மாவை ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து இட்லியாக எடுத்து கொள்ளவும். எடுத்த உடனேயே இடியாப்ப அச்சியில் வைத்து இடியாப்பம் போல பிழிந்து எடுத்து கொள்ளவும்.
இப்போது கடாயில் நல்லெண்ணெய் 4 தேக்கரண்டி ஊற்றி சூடானதும் அதில் கடுகு 2 தேக்கரண்டி, உளுந்து 2 தேக்கரண்டி, கடலை 2 தேக்கரண்டி, வெங்காயம் 2, பச்சை மிளகாய் 2, கருவேப்பிலை, கொத்தமல்லி தேவையான அளவு அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கிண்டவும். கடைசியாக தேங்காய் 1 கப் சேர்த்து நன்றாக கிண்டிய பிறகு அதில் பிழிந்து வைத்திருக்கும் சந்தகையை சேர்த்து கிண்டி இறக்கவும். இதில் தக்காளி சந்தகை, எழுமிச்சை சந்தகை என்று பலவித ஃபிளேவர்களில் செய்யலாம்.
இதை தேங்காய்ப்பாலுடனும் சேர்த்து சாப்பிடுவார்கள். இத்துடன் எள்ளுப்பொடி, சர்க்கரை சேர்த்து சாப்பிட்டாலும் அல்டிமேட்டாக இருக்கும். மேகி போன்ற ஆரோக்கியமில்லாத உணவை கேட்கும் குழந்தைகளுக்கு இந்த சந்தகையை விதவிதமாக செய்து கொடுப்பது ஆரோக்கியத்தை தரும். அதன் பிறகு குழந்தைகளும் மேகியை விரும்ப மாட்டார்கள்.
இதிலேயே சந்தகையோடு துருவிய தேங்காய், சக்கரை, ஏலக்காய்த் தூள், நெய்யில் வறுத்த முந்திரி, சிறிது உப்பு சேர்த்து இனிப்பாகவும் செய்து பரிமாறலாம். நீங்களும் இந்த டிஷ்ஷை உங்கள் வீட்டிலே ஒருமுறை செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க.