சத்தான புட்டு மற்றும் அடை எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்!

புட்டு மற்றும் அடை ...
புட்டு மற்றும் அடை ...Image credit- youtube.com
Published on

பொதுவாகவே ஆவியில் வேகவைத்த உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லது. இட்லி, கொழுக்கட்டை, புட்டு என ஆவியில் வேகவைத்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க ஆரோக்கியமாக இருப்பார்கள். புட்டில் ராகி புட்டு, அரிசி புட்டு, கோதுமைப் புட்டு, சிகப்பரிசி புட்டு, தினை மாவு புட்டு என வாரத்துக்கு இரண்டு முறையாவது செய்து கொடுக்கலாம்.

அரிசி மாவு புட்டு:

அரிசி மாவு 4 கப்

தேங்காய்த் துருவல்11/2 கப்

தண்ணீர் தேவையானது 

உப்பு தேவையானது

முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சிறிது போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.

பின்னர் மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதில் கொதிக்க வைத்துள்ள உப்பு நீரை சிறிது சிறிதாக விட்டு புட்டுக்கு ஏற்றவாறு கலந்து கொள்ளவும். தண்ணீரை அதிகமாக விட்டால் உதிர் உதிராக வராது. குறைவாக விட்டால் மிகவும் வறட்சியுடன் காணப்படும். மாவை கையால் பிடித்து விட கெட்டியாகவும், உதிர்த்தால் உதிர்ந்து விடவும் வேண்டும். இதுதான் சரியான பக்குவம்.

புட்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒன்று ஒன்றரை கப் தண்ணீர் விட்டு அந்தப் பாத்திரத்தில் கொடுத்திருக்கும் சிறு மூடியை வைத்து மூடி கொதிக்க விடவும்.

பின்னர் புட்டு பாத்திரத்தில் இருக்கும் நீளமான குழாயில் முதலில் புட்டு மாவு சிறிது, பின்னர் துருவிய தேங்காய் சிறிது போட்டு மறுபடியும் புட்டு மாவு சேர்த்து மூடி அந்தக் குழாயை புட்டு பாத்திரத்தின் மேல் வைத்து ஐந்தாறு நிமிடங்கள் ஆவியில் வேக விடவும். பின்னர் அதனை வெளியில் எடுத்து நாட்டு சர்க்கரை, கடலைக்கறி, நேந்திரம் பழத்துடன் பரிமாற சத்தான ஆவியில் வேகவைத்த புட்டு தயார்.

சத்தான அடை:

பச்சைப்பயிறு ஒரு கப் 

கருப்பு உளுந்து 1 கப்

கருப்பு கொண்டை கடலை‌1 கப்

வெந்தயம் ஒரு ஸ்பூன்

மிளகாய் 4

சீரகம் அரை ஸ்பூன்

மஞ்சள் தூள் அரை ஸ்பூன்

உப்பு தேவையானது

வெங்காயம் 1 

கருவேப்பிலை சிறிது 

கொத்தமல்லி சிறிது

இதையும் படியுங்கள்:
இரத்த சோகை பிரச்னைக்கு நிவாரணம் தரும் கொத்தவரங்காய்!
புட்டு மற்றும் அடை ...

பச்சைப்பயிறு, கருப்பு உளுந்து, கொண்டைக்கடலை, வெந்தயத்துடன் சேர்த்து தண்ணீர் விட்டு 4 மணி நேரம் ஊறவிடவும்.

களைந்து நீரை வடிகட்டி உப்பு, மிளகாய், சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து சிறிது தடிமனான அடையாக வார்த்து இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும். மொறு மொறுவென்று நல்ல ருசியில் சத்தான அடை தயார். இதற்கு தொட்டுக் கொள்ள வெல்லம் மற்றும் வெண்ணெய் படு ஜோராகப் பொருந்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com