சுருக்குனு சாப்பிட மாகாளிக்கிழங்கு & நாரத்தங்கா ஊறுகாய்கள்!
உணவுக்கு இணையாக விதவிதமான ஊறுகாய்கள் தொட்டுக்கொண்டு சாப்பிடுவது தனி ருசி. இதோ நமது பாட்டி காலத்தில் நம் வீட்டில் அடிக்கடி செய்த இந்த மருத்துவ குணமிக்க ஊறுகாய்களை செய்து உணவில் மேலும் ருசி சேர்த்து மகிழுங்கள்.
வேர் வகையைச் சேர்ந்த தனித்தன்மை மிக்க நல்ல மணமுடைய மாகாளிக்கிழங்கு. ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்திலும் பல தைலங்களிலும் லேகியங்களிலும் மணமூட்டும் பொருளாகச் சேர்க்கப் படுகிறது. இதிலுள்ள மருத்துவ குணமிக்க வேதிப்பொருள்கள் பல்வேறு பாதிப்புகளைக் குணப்படுத்தும்.
நாரத்தங்காயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்தத்தை தூய்மை செய்கிறது. இதன் சாறு வாந்தியைக் கட்டுப்படுத்தும். பசியின்மை மந்தம் போன்றவற்றுக்கு தீர்வாகும்.
மாகாளிக் கிழங்கு ஊறுகாய்
தேவை:
மாகாளி கிழங்கு- 1/2 கிலோ
எலுமிச்சம் பழம் - 2 (சாறு பிழிந்தது?)
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 10
கடைந்த தயிர் - ஒரு கப்
கல்உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மாகாளிக் கிழங்கை மண் போக நன்றாக கழுவி சுமார் 12 மணி நேரம் அதாவது இரவு முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள் மென்மையான அதன் தோலை சீவி நடுவில் இருக்கும் தடிமனான வேரை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும். இப்போது கடுகுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் அரிந்த மாகாளிக்கிழங்கு போட்டு அதனுடன் அரைத்த பொடி, தயிர் எலுமிச்சைசாறு சேர்த்து நன்கு குலுக்கவும். ஊறுகாய் ரெடி. இது ஊற ஊற சுவை சூப்பராக இருக்கும். தயிர் சாதத்துடன் பரிமாறலாம். இதில் எலுமிச்சம் பழம் சேர்ப்பதால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் அதேபோல் இதற்கு எண்ணெய் சேர்க்க வேண்டியதில்லை என்பதால் இது உடல் நலனுக்கு மிகவும் உகந்தது.
நாரத்தங்காய் ஊறுகாய்
தேவை:
நாரத்தங்காய் - 2 மீடியம் சைஸ்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
கடுகு -1 டீஸ்பூன்
கட்டிப் பெருங்காயம் - சிறு துண்டு
பெருங்காயத்தூள் - சிட்டிகை நல்லெண்ணெய் - 3 டே ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
செய்முறை:
நன்றாகக் கழுவி ஈரம் போகத் துடைத்த நாரத்தங்காய்களை சிறு சிறு சதுரமாக நறுக்கி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு ஜாடியில் போட்டுக் கலக்கவும். இதை சுமார் 10 நாட்கள் வரை தினமும் கிளறிவிட்டு பாதுகாக்க வேண்டும். உப்பு சற்று அதிகமாக இருந்தால் ஊறும்போது சுவை கூடும்.
இப்போது வெறும் வாணலில் வெந்தயம் கட்டிப் பெருங்காயம் காய்ந்த மிளகாய் தனித்தனியாக வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் பொடிக்கவும். நன்கு ஊறிய நார்த்தங்காயுடன் அரைத்த பொடியை சேர்த்து நன்கு கலக்கவும். அடிகனமான வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு பெருங்காயத்தூள் தாளித்து ஊறுகாயுடன் சேர்த்து கலந்தால் சுருக்குனு சாப்பிட ஊறுகாய் ரெடி. இந்த நாரத்தங்காய் ஊறுவதற்கு நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் தேவைப்படும்போது எடுத்து தாளித்துக் கொண்டால் ஊறுகாய் புதுசாகவும் சுவையாகவும் இருக்கும்.