
மஹாராஷ்டிர மக்களின் பாரம்பரியம் மிக்க சுவையான உணவு மிசல் பாவ் (Misal Pav). இதை அவர்கள் மதிய உணவாகத் தயாரித்து உண்பதில் மிக்க ஆர்வமுடையவர்கள். இதை எவ்வாறு தயாரிப்பது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
மிசல் பாவ் ரெசிபி
தேவையான பொருள்கள்:
1.முளை கட்டிய பாசிப் பயறு 1 கப்
2.எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
3.பெரிய வெங்காயம் 1
4.தக்காளி 2
5.இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன்
6.நறுக்கிய பச்சை மிளகாய் 1
7.மஞ்சள் தூள் ½ டீஸ்பூன்
8.சிவப்பு மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
9.கோடா மசாலா 1 டேபிள் ஸ்பூன்
10.சீரகம் 1 டீஸ்பூன்
11.கடுகு ½ டீஸ்பூன்
12.பெருங்காய தூள் ½ டீஸ்பூன்
13.உப்பு தேவையான அளவு
14.தண்ணீர் தேவையான அளவு
15.மெல்லிய கீற்றுகளாய் நறுக்கிய எலுமிச்சை
16.கொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி
17. சேவ் 100 கிராம்
18.நசுக்கிய பெப்பர் 1 டீஸ்பூன்
19. பட்டர் தேவையான அளவு.
20.பாவ் பன் 4
செய்முறை:
ஒரு கப் பாசிப்பயறை கழுவி சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு ஒரு நாள் முழுக்க ஊறவைக்கவும். பின் நீரை வடிகட்டி பிரித்துவிட்டு ஊறிய பயறை சுத்தமான காட்டன் துணியில் வைத்துக்கட்டி இருட்டான இடத்தில் வைத்துவிடவும். நாற்பது மணிநேரம் கழித்து துணியைப் பிரித்துப் பார்த்தால் பயறு நன்கு முளைவிட்டு வந்திருக்கும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும். பின் அதில் கடுகு, சீரகம், பெருங்காயம் சேர்க்கவும். கடுகு வெடித்ததும், நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் சிவந்த பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்க்கவும்.
நல்ல மணம் வரும்வரை வதக்கவும். பின் தக்காளியை நறுக்கி அதனுடன் சேர்க்கவும். உப்பு போடவும். தக்காளி வெந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை (5-7 நிமிடங்கள்) சிறு தீயில் வைத்து வதக்கவும். இப்பொழுது அதில் மஞ்சள்தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் கோடா மசாலா சேர்க்கவும். பிறகு அதில் முளை கட்டிய பாசிப்பயறை சேர்த்து, அனைத்தும் ஒன்று சேர்ந்து வருமாறு கிளறி விடவும்.
அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரேவி பதம் வரும் வரை பத்து நிமிடம் அடுப்பில் வைத்திருக்கவும். பின் அதன் மீது கொத்தமல்லி இலைகள் மற்றும் சிறிது நசுக்கிய மிளகை தூவவும். இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
தோசை கல்லில் பட்டர் தடவி சூடானதும் அதில் பன்களை தோய்த்து பொன் நிறம் ஆனதும் தட்டில் எடுத்து வைக்கவும். அதனுடன் சூடான மிசலையும் வைக்கவும். அதன் மேல் எலுமிச்சை ஸ்லைஸ்களை நட்டு வைக்கவும். தேவையான அளவு சேவ் (ஓமப் பொடி) தூவி உண்டு மகிழவும்.