
இன்றைக்கு டேஸ்டியான தக்காளி தொக்கு மற்றும் நெல்லிக்காய் கார சட்னி ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
தக்காளி தொக்கு செய்ய தேவையான பொருட்கள்.
சின்ன வெங்காயம்-20
தக்காளி-3
உருளைக்கிழங்கு-1
பச்சை மிளகாய்-3
பூண்டு-10
கல் உப்பு-1/2 தேக்கரண்டி.
எண்ணெய்-1 தேக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதளவு.
மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
கொத்தமல்லி-சிறிதளவு.
தக்காளி தொக்கு செய்முறை விளக்கம்.
முதலில் 20 சின்ன வெங்காயத்தை நெருப்பில் சுட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுத்து பெரிய உருளைக்கிழங்கு 1, தக்காளி 3 பத்து நிமிடம் சுட்டு எடுத்துக் கொள்ளவும்.
10 பூண்டை சுட்டு எடுத்துக் கொள்ளவும். கடைசியாக 3 பச்சை மிளகாயை சுட்டு எடுத்துக் கொள்ளவும். இப்போது இதில் தோலை மட்டும் உரித்து எடுத்துவிட்டு சின்னதாக நறுக்கிவிட்டு ½ தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து இடித்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, 1 தேக்கரண்டி சீரகம், கருவேப்பிலை சிறிது சேர்த்து அத்துடன் இடித்து வைத்திருக்கும் கலவையை சேர்த்து தாளித்து விடவும். இப்போது இதில் ½ தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக தொக்கு பதம் வரும்வரை வதக்கி கடைசியில் கொத்தமல்லி சிறிது சேர்த்து இறக்கிவிடவும். சுவையான தக்காளி தொக்கு தயார்.
இதை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அல்டிமேட்டாக இருக்கும். நீங்களும் வீட்டில் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
நெல்லிக்காய் கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்.
எண்ணெய்-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.
வரமிளகாய்-4
பூண்டு-5
வெங்காயம்-1
தக்காளி-1
நெல்லிக்காய்-4
புளி-சிறிதளவு.
தேங்காய் துண்டு-1 கைப்பிடி.
உப்பு-தேவையான அளவு.
தாளிக்க,
எண்ணெய்-1 தேக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதளவு.
நெல்லிக்காய் கார சட்னி செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் எண்ணெய் 1 தேக்கரண்டி விட்டு உளுந்து 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, வரமிளகாய் 4, பூண்டு 5, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பொடியாக நறுக்கிய தக்காளி 1 கப் சேர்த்து நன்றாக வதக்கிவிடவும். இத்துடன் நறுக்கி வைத்திருக்கும் நெல்லிக்காய் 4 சேர்த்து வதக்கிவிட்டு புளி சிறிதளவு, தேங்காய் கைப்பிடி அளவு சேர்த்து வதக்கிவிட்டு உப்பு தேவையான அளவு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து தாளித்து சட்னியில் கலந்துவிட்டால், நெல்லிக்காய் கார சட்னி தயார்.
இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.