'மஹ்ஜூபா’ - சப்பாத்திக்கு பதிலா இன்னைக்கு நைட்டு இதை ட்ரை பண்ணுங்க! 

Mahjouba recipe
Mahjouba recipe
Published on

ஹ்ஜூபா (Mahjouba) என்று சொன்னவுடனே, இது ஏதோ பெரிய ஃபாரீன் டிஷ் என்று பயந்துவிடாதீர்கள். இது அல்ஜீரியா நாட்டின் மிகவும் பிரபலமான தெருவோர உணவு. ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், இதன் செய்முறையும் சுவையும் நம் ஊர் 'வீச்சு பரோட்டா' போலவே இருக்கும். 

மைதா மற்றும் ரவை கலந்த மெல்லிய மாவுக்குள், காரசாரமான வெங்காய-தக்காளி மசாலாவை வைத்து மடித்துச் சுடுவதுதான் இந்த டிஷ். இதை நாம் நம் ஊர் ஸ்டைலில், கரம் மசாலா எல்லாம் சேர்த்து, இந்தியன் ஸ்டைல் மஹ்ஜூபாவாக மாற்றினால், டின்னருக்கு இதைவிடச் சிறந்த டிபன் வேறில்லை.

தேவையான பொருட்கள்:

மாவு பிசைய:

  • ரவை - 1 கப்

  • மைதா மாவு - 1 கப்

  • உப்பு - தேவையான அளவு

  • தண்ணீர் - பிசையத் தேவையான அளவு

  • எண்ணெய் - தாராளமாக.

உள்ளே வைக்க:

  • பெரிய வெங்காயம் - 2 

  • தக்காளி - 2 

  • பூண்டு - 4 பற்கள்

  • பச்சை மிளகாய் - 2

  • மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

  • கரம் மசாலா - ½ டீஸ்பூன்

  • மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்

  • கொத்தமல்லி தழை - சிறிதளவு

  • உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் நைஸான ரவை, மைதா மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். இதில் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றிச் சப்பாத்தி மாவை விடச் சற்றுத் தளர்வாகப் பிசையவும். ரவை ஊறுவதற்குத் தண்ணீர் தேவைப்படும் என்பதால், நன்கு 10 நிமிடம் அழுத்திப் பிசையவேண்டும். 

மாவு கையில் ஒட்டாத பதம் வந்ததும், மேலே தாராளமாக எண்ணெய் தடவி, ஒரு ஈரத்துணியால் மூடி குறைந்தது 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை ஊறவிடவும். மாவு எவ்வளவு ஊருகிறதோ, அவ்வளவு மெல்லியதாக விரிக்க வரும்.

 மாவு ஊறும் நேரத்தில், உள்ளே வைக்கப்போகும் மசாலாவைத் தயார் செய்யலாம். வாணலியில் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும், தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
தக்காளி இருந்தால் போதும்... பார்லர் போகாமலே முகம் ஜொலிக்கும்!
Mahjouba recipe

தக்காளி மசிந்தவுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும். இது ஒரு தக்காளி தொக்கு பதத்திற்குத் திரண்டு வரவேண்டும். தண்ணீர் இருக்கக்கூடாது. கடைசியாகக் கொத்தமல்லித் தழை தூவி இறக்கி, மசாலாவை முழுவதுமாக ஆறவிடவும்.

ஊறிய மாவை எடுத்து மீண்டும் ஒருமுறை பிசைந்து, பெரிய உருண்டைகளாக உருட்டவும். சமையல் மேடை அல்லது ஒரு பெரிய தட்டில் எண்ணெய் தடவவும். ஒரு உருண்டையை வைத்து, கைகளால் அல்லது கட்டையால் எவ்வளவு மெல்லியதாக விரிக்க முடியுமோ அவ்வளவு மெல்லியதாக விரிக்கவும். 

கிழிந்தாலும் பரவாயில்லை, கண்ணாடி போலத் தெரிய வேண்டும். இப்போது நடுவில் நாம் செய்து வைத்துள்ள வெங்காய-தக்காளி மசாலாவை வைத்துப் பரப்பவும். பிறகு, பரோட்டாவை மடிப்பதுபோல நான்கு பக்கமும் மடித்து, ஒரு சதுர வடிவத்திற்கு கொண்டு வரவும்.

இதையும் படியுங்கள்:
மார்க் வைத்து வேலை..! தமிழ்நாடு அஞ்சல் துறையில் 2019 காலியிடங்கள் அறிவிப்பு..!
Mahjouba recipe

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சூடாக்கவும். மடித்து வைத்துள்ள மஹ்ஜூபாவை அப்படியே கல்லில் போடவும். சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும். ஒரு பக்கம் சிவந்ததும் திருப்பிப் போடவும். உள்ளே இருக்கும் மசாலா சூடாகி, வெளியே இருக்கும் மாவு மொறுமொறுப்பாக மாறும் வரை இரண்டு பக்கமும் நன்கு வேகவைத்து எடுக்கவும்.

அல்ஜீரியன் ஸ்டைல் ரெசிபியில், இந்தியன் மசாலா மணக்கும் மஹ்ஜூபா தயார். இதைச் சுடச்சுடச் சாப்பிட்டால், வெளியே கிரிஸ்பியாகவும், உள்ளே ஜூஸியாகவும் இருக்கும். விடுமுறை நாட்களில் வித்தியாசமாக ஏதாவது சமைக்க நினைத்தால், கண்டிப்பா இதை ட்ரை பண்ணுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com