காலிஃப்ளவர் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான காய்களில் ஒன்று. காலிஃப்ளவர் குருமா என்றாலும் கிரேவி என்றாலும் சில்லி என்றாலும் அனைவரும் விரும்புவர். காலிபிளவரில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் மருந்தாகிறது. இதில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் நமக்கு எதிர்ப்பு சக்தியை தருகிறது. மூட்டு வலியை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இது புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மையும் கொண்டதாக கருதப்படுகிறது. ஆரோக்கியம் தரும் காலிஃப்ளவரை தினசரி நமது உணவில் அளவாக சேர்க்கலாம்.
காலிபிளவர் தக்காளி கிரேவி
தேவை
காலிபிளவர் -சிறியது ஒன்று
தக்காளி - மூன்று
சிவப்பு மிளகாய் - 3
மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
சீரகம் -ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள்- ஒரு டீஸ்பூன்
பூண்டு- ஆறு பற்கள்
எண்ணெய் - தாளிக்க
கடுகு உளுத்தம் பருப்பு - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு கலந்த வெந்நீரில் போட்டு வடித்து வைக்கவும் தக்காளியுடன் மிளகாய் சீரகம் பூண்டு சேர்த்து மிக்சியில் அரைத்து எடுக்கவும். ஒரு வாணலியில் கடாய் வைத்து தேவையான எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை தாளித்து தக்காளிப்ளவரை சேர்த்து நன்கு வதக்கி அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதைப் போட்டு அரைத்து வைத்துள்ள தக்காளி விழுது சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து தேவையான நீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பச்சை வாசனை சென்று எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி கொத்தமல்லி தழை தூவி பரிமாறினால் சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள காலிஃப்ளவர் தக்காளி கிரேவி சூப்பராக இருக்கும்.
காலிஃப்ளவர் சட்னி:
தேவை
காலிஃப்ளவர் - சிறியது ஒன்று
தேங்காய்- அரை மூடி
இஞ்சி -சிறிய துண்டு
சோம்பு - ஒரு டீஸ்பூன்
ஏலக்காய்- 2
பச்சைமிளகாய் - 5
பூண்டு- 5 பற்கள்
கசகசா - ஒரு ஸ்பூன்
கிராம்பு- இரண்டு
பட்டை -இரண்டு சிறிய துண்டு
சிறிய வெங்காயம் - 15
தக்காளி - ஒன்று
முந்திரி - 8
உப்பு - தேவைக்கு
எண்ணெய்- ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
காலிஃப்ளவரை பொடி பொடியாக வெட்டி கொதிக்கும் நுரில் போட்டு இரண்டு நிமிடம் விட்டு வடிகட்டி வைக்கவும். இஞ்சி ,பூண்டு, ஏலக்காய் ,சோம்பு, கிராம்பு, பச்சை மிளகாய், கசகசா, தேங்காய் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக சிவந்ததும் நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கி வடித்து வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து வதக்கி அரைத்த தேங்காய் மசாலா ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கொதி வந்து வெந்து சற்று கெட்டியான பின் இறக்கவும் இந்த காலிபிளவர் சட்னியை சப்பாத்தி இட்லிக்கு தொட்டு சாப்பிடலாம்.இதே முறையில் தேங்காய்ப்பால் எடுத்து சேர்த்தால் அது குருமா போல் சாதத்திற்கு போட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.