நம்முடைய வாழ்க்கையில் எந்நேரமும் ஜோதிடத்தையும், விதியையும் நம்பிக்கொண்டிருப்பது நல்லதா? உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால், ஜோதிடத்தைக் கூட பொய்யாக்கலாம் என்பதை உணர்ந்து கொள்ள இந்தக் கதையை முழுமையாக படியுங்கள்.
ஒரு ஜோசியர் ஜாதகம் பார்க்க ஒரு வீட்டிற்கு செல்கிறார். அங்கே 8 வயது பையன் ஒருவன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அவனுடைய ஜாதகத்தை பார்த்த ஜோசியரோ, ‘இந்த பையனுக்கு படிப்பே வராது. இவன் கல் உடைக்கத்தான் லாயக்கு படிப்பிற்காக இந்த பையனுக்கு செலவழிக்காதீர்கள்’ என்று சொல்லிவிட்டு செல்கிறார்.
இது அந்த பையனின் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. அவர் சொன்ன வார்த்தைகாகவே அந்த பையன் கடுமையாக படிக்கிறான். 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் வாங்குகிறான். அவனுக்கு M.B.B.S சீட் கிடைக்கிறது. அந்த பையன் நன்றாக அதையும் படித்து முடிக்கிறான். நெப்ராலஜியில் மிகப்பெரிய மருத்துவராக ஆகி சொந்தமாக ஒரு மருத்துவமனை கட்டுகிறான்.
அவருடைய மருத்துவமனைக்கு ஒரு பெரியவர் வருகிறார். முப்பது வருடம் கழித்து அவருடைய கிட்னியில் ஏதோ பிரச்னை என்று மருத்துவம் பார்ப்பதற்காக வருகிறார். அந்த பெரியவருக்கு மட்டும் ஸ்பெஷலாக டிரீட்மெண்ட் கொடுக்க சொல்லி இந்த டாக்டர் சொல்லிவிட்டு செல்கிறார்.
அந்த பெரியவருக்கு நன்றாக மருத்துவம் பார்த்து அவர் குணமடைந்து போகும்போது அந்த மருத்துவரிடம் சென்று கேட்கிறார். ‘எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு ஸ்பெஷலான டிரீட்மெண்ட் கொடுத்தீர்கள்’ என்று கேட்கிறார். அதற்கு அந்த டாக்டர் சிரித்துக்கொண்டே சொல்கிறார், நான் 8 வயதாக இருக்கும்போது, நான் கல் உடைக்கத்தான் லாயக்கு என்று நீங்கள் கணித்து சொன்னீர்கள். ஆனால், அந்த கல் உங்கள் கிட்னியில் இருக்கும் என்பதை உங்களால் கணிக்க முடியவில்லையே? என்று சொன்னாராம்.
ஜோதிடத்தில் கணிப்பது அனைத்துமே உண்மையாக இருக்கும் என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு இருந்திருந்தால், அந்த பையன் ஒரு சிறந்த மருத்துவராக ஆகியிருக்க முடியாது. நாம் என்னவாக வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது நம் கையிலேதான் உள்ளது. ஜோதிடம், ஜாதகம் ஆகியவை நம் வாழ்க்கையை தீர்மானித்துவிட போவதில்லை. நம்முடைய விதியையே மாற்றும் வலிமை விடாமுயற்சிக்கு உண்டு. இதை நினைவில் வைத்துக்கொண்டு உழைத்துப்பாருங்கள். உங்களுக்கும் நிச்சயம் வாழ்வில் வெற்றிக்கிட்டும்.