பச்சை துவையலும் கெட்டிச் சட்னியும் இப்படி செஞ்சு பாருங்க... ஒரு வாரம் வரை கெடாதுங்க!

green thuvaiyal & getti chutney
green thuvaiyal & getti chutneyImg credit: Healthy-ish & happy

பச்சை சின்ன வெங்காயத் துவையல்:

சின்ன வெங்காயத்தை அதன் மருத்துவ குணம் மாறாமல் சாப்பிடுவது தான் சிறந்தது. நிறைய எண்ணெய் விட்டு வதக்கி, மிளகாய் சேர்த்து அளவுக்கு அதிகமாக புளியையும் போட்டு நாக்குக்கு சுவையைக் கூட்டும் சின்ன வெங்காய சட்னியால் ஒரு பயனும் இல்லை. அதுவே வதக்காமல் பச்சையாக அரைத்து நிறைய புளி, காரம் சேர்க்காமல் செய்தால் சின்ன வெங்காயத்தின் முழு பலனும் நமக்கு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

 • சின்ன வெங்காயம் ஒரு கப்

 • தேங்காய் துருவல் 2 ஸ்பூன்

 • உப்பு (தேவைக்கு ஏற்ப)

 • புளி சிறிய கொட்டை பாக்களவு

 • மிளகாய் வற்றல் 2

 • கறிவேப்பிலை சிறிது

செய்முறை:

சின்ன வெங்காயத்தை தோலுரித்து உப்பு, புளி, மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் அனைத்தையும் சேர்த்து பச்சையாகவே மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் பிறகு, நல்லெண்ணையில் கடுகு தாளித்து பச்சையாக அரைத்து வைத்த விழுதில் கொட்ட, மிகவும் சத்தான, ருசியான சின்ன வெங்காயத்தின் முழு பலனும் கிடைக்கக்கூடிய துவையல் ரெடி.

இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை ஆகியவற்றிற்கும் தொட்டுக் கொள்ளலாம்.

பச்சை சுண்டைக்காய் துவையல்:

சுண்டைக்காய் வகைகள்:

சுண்டைக்காயில் இரண்டு வகை உண்டு. மலை சுண்டைக்காய், பால் சுண்டைக்காய். இரண்டுமே உடலுக்கு நல்லது. உடல் சோர்வு மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்தது. வறட்டு இருமல் , சளி தொந்தரவையும்,- வயிற்றில் உள்ள பூச்சிகளையும் அழிக்கும் தன்மை கொண்டது.

தேவையான பொருட்கள்:

 • பச்சை சுண்டைக்காய் ஒரு கப்

 • உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன்

 • மிளகாய் வற்றல் 4

 • உப்பு தேவையானது

 • புளி சிறு நெல்லிக்காய் அளவு

 • தேங்காய் துருவல் 2 ஸ்பூன்

 • இஞ்சி ஒரு துண்டு

செய்முறை:

உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு பச்சை சுண்டைகாயை போட்டு நன்கு வதக்கவும். கலர் மாறி வெள்ளை நிறத்தில் வரும்போது சுண்டக்காயை இறக்கி உப்பு ,புளி ,விருப்பப்பட்டால் தேங்காய் துருவல், இஞ்சி ஒரு துண்டு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

இதனை சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு பிசைந்து சாப்பிட வயிற்றுப் பூச்சிகள் அழிவதுடன்,வயிறு சம்பந்தமான பிரச்சினைகளும் ,அஜீரணம் போன்றவையும் சரியாகும். தேங்காய் சேர்க்காமல் துவையல் அரைத்தால் ஒரு வாரம் வரை வைத்தும் சாப்பிடலாம் கெடாது.

சிக்மகளூர் சட்னி:

ரெகுலரா பண்ற சட்னியை விட இது மாறுதலான ருசியுடன் இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க!

தேவையான பொருட்கள்:

 • கடலைப்பருப்பு 2 ஸ்பூன்

 • உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன்

 • தனியா 2 ஸ்பூன்

 • சீரகம் ஒரு ஸ்பூன்

 • பூண்டு 6 பல்

 • பச்சை மிளகாய் 4

 • தக்காளி 2

 • வெள்ளை எள் 1 ஸ்பூன்

 • புதினா 1 கைப்பிடி

 • தேங்காய் துருவல் 2 ஸ்பூன்

 • உப்பு

 • புளி சிறிய எலுமிச்சை அளவு

செய்முறை:

முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, சீரகம் எல்லாவற்றையும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு வறுத்து எடுக்கவும். இத்துடன் பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். அத்துடன் ஒரு ஸ்பூன் வெள்ளை எள், புதினா ஒரு கைப்பிடி, தேங்காய் துருவியது, புளி, உப்பு சேர்த்து வதக்கி சிறிது ஆறியதும் அரைத்தெடுக்கவும்.

வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை, ஒரு மிளகாய் வற்றல் சேர்த்து தாளித்துக் கொட்ட மிகவும் ருசியான சிக்மகளூர் சட்னி தயார்.

இதையும் படியுங்கள்:
வடு மாங்காய் ஊறுதுங்கோ தயிர் சாதம் சாப்பிடுங்கோ! – (வடு மாங்காய் ரெசிபீஸ்)
green thuvaiyal & getti chutney

கொத்தமல்லி கெட்டி சட்னி:

தேவையான பொருட்கள்:

 • கொத்தமல்லி ஒரு பெரிய கட்டு

 • உளுத்தம் பருப்பு 4 ஸ்பூன்

 • மிளகாய் வற்றல் 10

 • உப்பு தேவையானது

 • புளி எலுமிச்சை அளவு

 • வெல்லம் ஒரு துண்டு

 • பெருங்காய கட்டி சிறிது

 • தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, நல்லெண்ணெய்

செய்முறை:

பெரிய கட்டு கொத்தமல்லி ஒன்றை ஆய்ந்து சுத்தம் செய்து பேப்பரில் பரத்தி வைக்கவும். நன்கு ஈரம் போனதும் உபயோகப்படுத்தினால், பத்து நாட்கள் ஆனாலும் இந்த சட்னி கெடாது. வாணலியில் உளுத்தம் பருப்பு, மிளகாய், பெருங்காய கட்டி ஆகியவற்றை சிறிது நல்லெண்ணெய் விட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.

வறுத்த சாமானுடன் தேவையான உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். ஓரளவு பொடிந்ததும் கொத்தமல்லி சேர்த்து தண்ணீர் எதுவும் விடாமல் கெட்டியாக அரைக்கவும். கடைசியாக ஒரு துண்டு வெல்லம் சேர்த்து அரைத்து நல்லெண்ணையில் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு தாளித்துக் கொட்ட சூப்பரான கொத்தமல்லி கெட்டி சட்னி தயார்.

டிபன் வகைகளுக்கும், தயிர் சாதத்திற்கும் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். தேங்காய் எதுவும் சேர்க்காததால் தாராளமாக ஒரு வாரத்திற்கு மேல் கெடாமலும் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com