
சூடான சாதத்திற்கு சுருக்குனு குழம்பு ஊற்றிபா பிசைந்து சாப்பிடுவதில் தனி சுகம்தான். அதிலும் கடித்துக்கொள்ள அப்பளம் வகைகள் இருந்தால் புளி சேர்க்கும் குழம்புகள் வெகு ருசியாக ஆகிவிடும்.
இதோ சத்தான ஆரோக்கியம் தரும் 2 குழம்பு வகைகள் இங்கு..
வற்றல் கலவை குழம்பு
தேவையானவை:
சுண்டைக்காய் வற்றல் கத்தரிக்காய் வற்றல் மணத்தக்காளி போன்ற வற்றல் வகைகள் - தலா ஒரு கைப்பிடி
நாட்டுத் தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 15
மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - காலத்திற்கேற்ப
கொத்துமல்லித்தூள்- 1 ஸ்பூன்
புளி- நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கு
மிளகு ,சீரகம், கடலை பருப்பு - தலா 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கடுகு கருவேப்பிலை சிறிது
காய்ந்த மிளகாய் - 2
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
புளியைக் கரைத்து தூசு போக வடிகட்டி வைத்துக்கொள்ளவும் . மிளகு சீரகம் கடலைப்பருப்பு வெந்தயம் எள்ளை மிதமான தீயில் வைத்து சிவக்க வறுத்து பொடிக்கவும். அடி கனமான கடாயில் நல்லெண்ணெய்விட்டு கடுகு கறிவேப்பிலை வரமிளகாய் போட்டுத் தாளித்து வற்றல் வகைகளை ஒவ்வொன்றாகப் போட்டு கருகி விடாமல் பதமாக வறுத்து தோலுரித்த முழு சின்ன வெங்காயம் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
இத்துடன் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் கொத்து மல்லித்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கி தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். குழம்பு வற்றி திக்காக வரும்போது புளிக் கரைசலை ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவிடவும். குழம்பு வற்றி சுண்டியதும் வறுத்தப் பொடியை சேர்த்து கிளறி இறக்கவும். சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட சுவையாகவும் அதேசமயம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகும் இந்த வற்றல் கலவை குழம்பு.
காய்க்கலவை குழம்பு
தேவை:
முருங்கைக்காய்- 1
பச்சை மொச்சைக்காய் - அரைக்கப் கத்தரிக்காய்- 4
பூண்டு -7
சின்ன வெங்காயம் - 10
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் - 3
தக்காளி :3
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
பளி- எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
கடுகு ,உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
புளியைக் கரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளித்து இரண்டாகப் பிளந்த சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி தோல் சீவிய இஞ்சியை தட்டிப்போட்டு பூண்டையும் நசுக்கி போட்டு நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் நறுக்கிய தக்காளி, கத்தரிக்காய் முருங்கைக்காய் மற்றும் பச்சை மொச்சையை சேர்த்து மேலும் பச்சை வாசனை போகும்வரை அரைக்கப் நீர் விட்டு உப்பு சேர்த்து வேகவிடவும் இதில் புளி கரைசலை ஊற்றி கொதிக்க விட்டு அனைத்தும் ஒன்றாக சேர்ந்து நன்கு சுருண்டு குழம்பாக வந்ததும் இறக்கவும். பச்சை மொச்சைக்காய் கிடைக்கவில்லை எனில் காய்ந்த மொச்சையை சுடுநீரில் போட்டு சில மணிநேரம் ஊறவைத்து பின் குக்கரில் வேகவிட்டு எடுத்தும் சேர்க்கலாம். சூடான சாதத்திற்கு ஏற்ற குழம்பு இது.