எந்தவொரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும், பந்தியில் பரிமாறப்படும் இனிப்பு வகைகளுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் உண்டு. அதிலும் குறிப்பாக, கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் பாயாசத்தின் சுவையை அவ்வளவு எளிதில் எவராலும் மறந்துவிட முடியாது.
பல வகையான பாயாசங்கள் இருந்தாலும், ஒன்பது வகையான நவரத்தினங்களைக் குறிக்கும் விதமாக, ஒன்பது உலர் பழங்கள் மற்றும் பருப்பு வகைகளைச் சேர்த்து செய்யப்படும் நவரத்ன பாயாசம் ஒரு ராஜபோக சுவையைத் தரக்கூடியது.
பாலின் திக்னெஸ், ஒவ்வொரு முறை சுவைக்கும் போதும் வாயில் தட்டுப்படும் அந்த உலர் பழங்களின் சுவை, இந்த இனிப்பிற்கு மேலும் மெருகூட்டுகிறது. இத்தகைய சிறப்பான இனிப்பை, பெரிய சமையல் கலைஞர்கள் மட்டும்தான் செய்ய முடியும் என்றில்லை.
சரியான அளவுகளையும், வழிமுறைகளையும் பின்பற்றினால், நம் வீட்டு சமையலறையிலேயே அந்தத் திருமணப் பந்தி சுவையைக் கொண்டு வர முடியும்.
தேவையான பொருட்கள்:
முழு கொழுப்புள்ள பால் - 1 லிட்டர்
கண்டென்ஸ்டு மில்க் - 1/4 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஜவ்வரிசி - 3 ஸ்பூன்
சேமியா - 1/4 கப்
நெய் - 3 ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - 1 ஸ்பூன்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
நவரத்தின பொருட்கள் ஒவ்வொன்றும் 1 ஸ்பூன்!
1. முந்திரி 2. பாதாம் 3. பிஸ்தா 4. உலர் திராட்சை 5. சாரப்பருப்பு 6. அக்ரூட் 7. உலர் அத்திப்பழம் 8. பேரிச்சம்பழம் 9. வெள்ளரி விதை.
செய்முறை!
முதலில் ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடாக்க வேண்டும். நெய் உருகியதும், மேலே குறிப்பிட்டுள்ள ஒன்பது வகையான உலர் பழங்கள் மற்றும் பருப்பு வகைகளைச் சேர்த்து லேசான பொன்னிறம் வரும் வரை வறுத்துத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே பாத்திரத்தில் மேலும் சிறிது நெய் சேர்த்து, சேமியாவை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், அதே பாத்திரத்தில் ஒரு லிட்டர் முழு கொழுப்புள்ள பாலை ஊற்றி நன்கு காய்ச்ச வேண்டும். பால் பொங்கி வரும் வேளையில், அடுப்பை மிதமான தீயில் வைத்து, அரை மணி நேரம் ஊறவைத்த ஜவ்வரிசியைச் சேர்க்க வேண்டும். ஜவ்வரிசி வெந்து கண்ணாடிப்பதம் வந்ததும், வறுத்து வைத்துள்ள சேமியாவைச் சேர்த்துக் கிளறவும்.
சேமியா நன்கு வெந்து பாலுடன் கலந்ததும், சர்க்கரை மற்றும் கண்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டும் பாலுக்கு ஒரு சிறப்பான அடர்த்தியையும், சுவையையும் கொடுக்கும்.
பாயாசம் நன்கு கொதித்து, ஒரு அருமையான பதத்திற்கு வந்தவுடன், பாலில் ஊறவைத்த குங்குமப்பூ மற்றும் ஏலக்காய்த் தூள் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். இறுதியாக, நாம் நெய்யில் வறுத்து வைத்துள்ள அந்த ஒன்பது வகையான நவரத்தினப் பொருட்களைப் பாயாசத்தில் சேர்த்துக் கிளறி அடுப்பை அணைத்துவிடலாம். இப்போது வீடு முழுவதும் மணக்கும் சுவையான நவரத்ன பாயாசம் பரிமாறத் தயாராக உள்ளது.
இந்த அற்புதமான ரெசிபியை உங்கள் இல்லத்தில் நடக்கும் சுப நாட்களிலோ அல்லது பண்டிகை நாட்களிலோ செய்து, உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்குப் பரிமாறி அனைவரின் பாராட்டுக்களையும் பெறுங்கள்.