வாயில் போட்டால் கரைந்துவிடும்! ஹோட்டல் சுவையையே மிஞ்சும் பன்னீர் கோஃப்தா!

Malai Kofta
Malai Kofta
Published on

நாம் எப்போது குடும்பத்துடன் உணவகங்களுக்குச் சென்றாலும், மெனு கார்டைப் பார்த்தவுடன் நம் கண்கள் தேடுவது 'பன்னீர்' வகைகளைத்தான். அதிலும் குறிப்பாக, அந்த க்ரீமியான கிரேவியில் மிதக்கும் மென்மையான பன்னீர் கோஃப்தாவை (Malai Kofta) பிடிக்காதவர்களே இருக்க முடியாது. 

ஆனால், வீட்டில் செய்யும்போது ஒன்று கோஃப்தா எண்ணெயில் பிரிந்து போகும், அல்லது கல்லு மாதிரி ஆகிவிடும். கவலை வேண்டாம், சரியான அளவுகளோடும், சில சின்ன சின்ன டிப்ஸ் உடனும் சமைத்தால், இனி உங்கள் வீட்டிலும் ரெஸ்டாரன்ட் மணக்கும்.

கோஃப்தா உருண்டைக்கு தேவையான பொருட்கள்:

  • துருவிய பன்னீர் - 1 கப்

  • வேகவைத்த உருளைக்கிழங்கு - 2

  • பச்சை மிளகாய் - 1

  • இஞ்சி துண்டு - சிறிது

  • கார்ன் ஃப்ளார் - 3 டேபிள் ஸ்பூன்

  • முந்திரி, திராட்சை - சிறிது

  • உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

  • எண்ணெய் - பொரிக்க.

கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

  • வெங்காயம் - 2 

  • தக்காளி - 3

  • முந்திரி பருப்பு - 10

  • இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

  • மல்லித்தூள் - 1 டீஸ்பூன்

  • கரம் மசாலா - ½ டீஸ்பூன்

  • மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்

  • சர்க்கரை - ½ டீஸ்பூன்

  • கஸ்தூரி மேத்தி - சிறிது

  • ஃப்ரெஷ் க்ரீம் - 2 ஸ்பூன்

  • பட்டர் - 2 ஸ்பூன்

  • பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தாளிக்க.

செய்முறை:

முதலில் நாம் கோஃப்தா உருண்டைகளைத் தயார் செய்ய வேண்டும். ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர் மற்றும் கட்டிகள் இல்லாமல் மசித்த உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்ளவும். இதில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, மிளகுத்தூள் மற்றும் பைண்டிங்கிற்காக சோள மாவு சேர்த்து மெசையவும். தண்ணீர் சேர்க்கக்கூடாது. இதைச் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டவும். 

உங்களுக்கு விருப்பமென்றால், உருண்டையின் நடுவில் ஒரு முந்திரி மற்றும் உலர்திராட்சையை வைத்து மூடலாம். வாணலியில் மிதமான சூட்டில் எண்ணெயை வைத்து, இந்த உருண்டைகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து தனியாக வைக்கவும். அதிக சூட்டில் பொரித்தால் உள்ளே வேகாது, தீய்ந்துவிடும் கவனம் தேவை.

இதையும் படியுங்கள்:
இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் நியூட்ரி கிரேவியை!
Malai Kofta

அடுத்ததாக, அந்த கிரேவியை தயார் செய்யலாம். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் முந்திரிப் பருப்பை போட்டு, அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மென்மையாகும் வரை வேகவைக்கவும். ஆறிய பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக்கொள்ளவும். ரெஸ்டாரன்ட் ஃபீல் கிடைக்க வேண்டுமென்றால், அரைத்த விழுதை ஒரு வடிகட்டியில் வடிகட்டி எடுத்துக்கொள்வது நல்லது.

இப்போது கிரேவியை தாளிக்கலாம். கடாயில் பட்டர் மற்றும் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இப்போது நாம் அரைத்து வைத்துள்ள வெங்காய-தக்காளி விழுதை ஊற்றவும். 

இதோடு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். மசாலாக்களின் பச்சை வாசனை போய், ஓரத்தில் எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

கடைசியாக, கிரேவியின் சுவையை கூட்ட சிறிது சர்க்கரை மற்றும் கரம் மசாலா சேர்க்கவும். பிறகு கஸ்தூரி மேத்தியை உள்ளங்கையில் வைத்து கசக்கித்தூவவும். இதுதான் அந்த ஹோட்டல் மணத்தைக் கொடுக்கும். அடுப்பை அணைக்கும் முன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து இறக்கவும்.

இதையும் படியுங்கள்:
பூஜை அறையில் சாமி படங்கள் எதைப் பார்த்தபடி இருக்க வேண்டும்? பலரும் செய்யும் பெரிய தவறு!
Malai Kofta

இங்குதான் எல்லோரும் தவறு செய்வார்கள். சூடான கிரேவியில் கோஃப்தா உருண்டைகளைப் போட்டு கொதிக்க வைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் உருண்டைகள் கரைந்துவிடும். பரிமாறுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு, ஒரு பவுலில் கோஃப்தா உருண்டைகளை வைத்து, அதன் மேல் சூடான கிரேவியை ஊற்றவும்.

இப்போது, மேலே நறுக்கிய கொத்தமல்லி மற்றும் சிறிது க்ரீம் ஊற்றி அலங்கரித்தால், சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் கோஃப்தா தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com