இனிப்பு உணவுகளை சாப்பிடுவது என்பது எப்போதுமே ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாகும். அதுவும் என்றாவது ஒருநாள் வீட்டில் கேசரி செய்துவிட்டால் போதும், கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் அப்படியே சாப்பிட்டு விடுவோம். இதுவரை பல விதங்களில் நீங்கள் கேசரி செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் மாம்பழத்தைப் பயன்படுத்தி கேசரி செய்ததுண்டா?. சரி வாருங்கள் இந்தப் பதிவில் மாம்பழ கேசரி எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
1 கப் ரவை
1 கப் மாம்பழம்
1 கப் சர்க்கரை
4 ஸ்பூன் நெய்
¼ கப் முந்திரி
1 கப் உலர் திராட்சை
½ ஸ்பூன் ஏலக்காய் தூள்
2 கப் தண்ணீர்
செய்முறை:
முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் கொஞ்சமாக நெய் சேர்த்து, மிதமான சூட்டில் முந்திரி மற்றும் உலர் திராட்சைகளை பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதே பாத்திரம் அல்லது கடாயில் ரவை சேர்த்து மிதமான தீயில் பொன் நிறமாக மாறும் வரை வறுக்கவும். அடுத்ததாக தனியாக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதித்ததும் அதில் மாம்பழம், சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து அனைத்தும் ஒன்றாகக் கரையும் வரை நன்கு கிளறவும்.
இந்தக் கலவையை ரவை இருக்கும் பாத்திரத்தில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறவும். மாம்பழக் கலவையை சேர்க்கும்போது ஜாக்கிரதையாக இருங்கள். ஏனெனில் அது மிகவும் சூடாக இருக்கும் என்பதால், சிதறி கையில் படும் வாய்ப்புள்ளது.
குறைந்த வெப்பத்தில் அப்படியே கிளறிக் கொண்டே இருங்கள். இறுதியில் கேசரி கெட்டியான பதத்திற்கு வந்ததும் தீயைக் குறைத்து, நெய் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சையை சேர்க்கவும். இப்போது அனைத்தையும் ஒன்றாகக் கிளறி சுமார் 3 நிமிடங்களுக்கு குறைந்த வெப்பத்தில் அப்படியே மூடி போட்டு வையுங்கள்.
இறுதியில் அடுப்பை அணைத்து கொஞ்ச நேரம் அப்படியேவிட்டால், சரியான பதத்திற்கு கேசரி வந்துவிடும். அவ்வளவுதான் சூப்பரான சுவையில் மாம்பழக் கேசரி தயார்.