Deepfake காணொளிக்கு இரையான இத்தாலி பிரதமர் Giorgia meloni. போலி ஆபாச வீடியோ உருவாக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டதால், பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே டீப் ஃபேக் காணொளி குறித்த சர்ச்சைகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டு வந்தாலும், குறிப்பாக பெண்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அதாவது பெண்களின் புகைப்படங்கள் காணொளிகள் போன்றவற்றை தொழில்நுட்பத்தின் உதவியால் எடிட் செய்து, ஆபாசமாக மாற்றி வலைதளங்களில் பரப்புவது அதிகரித்துள்ளது.
இந்தப் பிரச்சனை உலகெங்கிலும் எல்லா நாடுகளிலும் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தத் தொழில்நுட்பத்திற்கு தற்போது இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் இரையாகியுள்ளார். ஜார்ஜியா மெலோனி இருப்பது போலவே போலி ஆபாச வீடியோ உருவாக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி வருகிறது. ஒரு நாட்டின் பிரதமரை ஆபாசமாக சித்தரித்து வீடியோ போலியாக உருவாக்கப்பட்டது, உலகில் உள்ள மற்ற தலைவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த காணொளியை யார் உருவாக்கி இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரால் வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் இத்தகைய மோசமான காணொளியை உருவாக்கியது இரண்டு பேர் என்பதும், அவர்கள் இருவரும் தந்தை மகன் என்பதும் தெரியவந்தது. வேறு ஒருவரின் ஆபாச வீடியோவில் இத்தாலி பிரதமரின் முகத்தை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.
எனவே இவர்கள் இருவர் மீதும் அவதூறு வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடத்தியதில், போலி வீடியோ உருவாக்கிய ஸ்மார்ட் போனை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் அந்த டீப் பேக் வீடியோ, ஜார்ஜியா பிரதமராவதற்கு முன்பே உருவாக்கப்பட்டது என்பதையும் கண்டறிந்தனர்.
அமெரிக்க ஆபாச இணையதளத்தில் வெளியிடப்பட்ட மெலோனியின் போலி வீடியோ, சில மாதங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. இதற்கு மான நஷ்ட ஈடாக சுமார் 90 லட்சம் தர வேண்டும் என அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.