

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பூரி என்றால் மிகவும் பிடிக்கும். பொதுவாக பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா அல்லது வடகறிதான் சைடிஷ்ஷாக வைப்பார்கள். ஆனால் பூரிக்கு தொட்டுக்கொள்ள ஜிஞ்சர் கேப்சிகம் மசாலா சூப்பராக இருக்கும். ஆனால் இது நிறைய பேருக்கு தெரியாது. அதேபோல் எப்போதும் செய்யும் பூரி போல் இல்லாமல் இன்று மாம்பழம் சேர்த்து பூரி செய்வது எப்படி என்றும், அதற்கு தொட்டுக்கொள்ள ஜிஞ்சர் கேப்சிகம் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
ஜிஞ்சர் கேப்சிகம் மசாலா
தேவையான பொருட்கள் :
மூன்று கலர் குடைமிளகாய் தலா 1
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
இஞ்சி - விரல் அளவு
ப.மிளகாய் - 2
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - ஒன்றரை டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன்
முந்திரி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கஸ்தூரி மேத்தி - அரை டீஸ்பூன்
பட்டை - சிறிது துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
சீரகம் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 6 டீஸ்பூன்
செய்முறை:
மூன்று நிற குடைமிளகாய்களையும் மெலிதாக நீளவாக்கில் வெட்டி வைக்கவும். தக்காளி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை மெலிதாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். குடைமிளகாயை வெட்டியதை போன்று வெட்டிக்கொள்ளவும்.
கடாயில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெட்டி வைத்த குடைமிளாயை போட்டு 5 நிமிடம் கிரன்சியாக வதக்கிய பின்னர் தனியாக எடுத்து வைக்கவும்.
அடுத்த அதே எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு டார்க் பிரவுன் கலர் வரும் வரை வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் பொடியாக நறுக்கி தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் முந்திரி பேஸ்ட், தேவையான அளவு உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்து கிளறிவிடவும். இல்லையெனில் அடிபிடித்துவிடும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் மூடி போட்டு கொதிக்கவிடவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இஞ்சி, ப.மிளகாயை போட்டு ஒரு பிரட்டு பிரட்டியதும், வதக்கி வைத்த குடைமிளகாயை சேர்த்து வதக்கவும்.
அடுத்து கஸ்தூரி மேத்தி, குடைமிளகாய்க்கு தேவையான அளவு உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து ஒரு வதக்கு வதக்கியதும் மற்றொரு அடுப்பில் இருந்த தக்காளி வெங்காயம் கலவையை இதில் சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு நன்றாக கிளறிவிடவும். குடைமிளகாய் நன்றாக வதங்கக் கூடாது.
கிரன்சியாக இருக்கவேண்டும். அப்போதுதான் சுவையாக இருக்கும்.
இப்போது சூப்பரான ஜிஞ்சர் கேப்சிகம் மசாலா ரெடி.
மிருதுவான மாம்பழ பூரி மாவு பிசைவதற்கான அளவுகள்:
மாம்பழ பூரி :
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 1 கப்
நன்கு பழுத்த மாம்பழம் - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை :
மாம்பழத்தை தோல் நீக்கி விழுதை மட்டும் எடுத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன், உப்பு, அரைத்து வைத்துள்ள மாம்பழ விழுதை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின்னர் தேவைப்பட்டால் அதனுடன் சிறிது தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரம் அப்படியே மூடிபோட்டு வைக்கவும்.
அடுத்து மாவை பூரிகளாக திரட்டி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் திரட்டி வைத்த பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுத்து சூடாக ஜிஞ்சர் கேப்சிகம் மசாலாவுடன் பரிமாறவும்.
இப்போது சூப்பரான மாம்பழ பூரி, ஜிஞ்சர் கேப்சிகம் மசாலா ரெடி. சூடாக சாப்பிடலாம் வாங்க.
பூரி மற்றும் மாம்பழம் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, இரண்டையும் ஒன்றாக இணைத்து ஒரு புதிய சுவையில் தருவதன் மூலம் அவர்களின் ஊட்டச்சத்தை உறுதிசெய்ய முடியும். சமையல் கலையில் உங்களின் கிரியேட்டிவிட்டியை வெளிப்படுத்தி, அக்கம் பக்கத்தினர் வியந்து கேட்கும் வகையிலான ஒரு சிக்னேச்சர் டிஷ்ஷை நீங்கள் மாஸ்டர் செய்ய இந்த ரெசிபி பெரிதும் உதவும்.