

மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி கழித்து பௌர்ணமி அன்று வரும் திருவாதிரை பண்டிகை. (ஆருத்ரா தரிசனம்) நடராஜப் பெருமானை வணங்கி செய்யப்படும் பண்டிகை இது. அன்றைய தினம் திருவாதிரை களி, பாகற்காய் இனிப்பு தொக்கு செய்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்வர்.
திருவாதிரைக் களி
தேவையான பொருட்கள்:
பச்சரிசி 1கப்
பாசிப்பருப்பு -கால் கப்
பல்லுப் பல்லாகக் கீறிய தேங்காய் -கால் கப்
வெல்லம்- ஒன்றரை கப்
ஏலத்தூள்- ஒரு டீஸ்பூன்
நெய் -3 டேபிள்ஸ்பூன்
முந்திரி- 8.
செய்முறை:
அரிசியை சுத்தம் செய்து ஒருமணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். பிறகு நீரை வடித்து விட்டு நிழலில் உலர்த்தி சற்று சன்ன ரவையாக பொடித்து, வெறும் வாணலியில் வறுத்து வைக்கவும். பாசிப்பருப்பை வறுத்து சற்று மலர வேகவைக்கவும். வெல்லத்துடன் அரை கப் நீர் சேர்த்து சூடாக்கவும். வெல்லம் கரைந்ததும் இறக்கி வடிகட்டவும்.
ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில் தேங்காய் மற்றும் முந்திரியை வறுத்து அதில் 2 கப் தண்ணீர் மற்றும் வெந்த பாசிப்பருப்பை சேர்க்கவும். இந்த கலவை நன்கு கொதிக்கும்போது அரிசி ரவையை சேர்த்துக் கிளறி தீயை மிதமாக்கி வேகவிடவும். நன்கு வெந்ததும் வெல்லக் கரைசலை சேர்த்து மீதமுள்ள நெய் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும். திருவாதிரைக் களி நைவேத்தியத்திற்கு ரெடி.
பாகற்காய் இனிப்புத் தொக்கு
தேவையான பொருட்கள்:
பாகற்காய்- அரை கிலோ
சின்ன வெங்காயம் -ஒரு கப்
தக்காளி-2
புளி -சிறிய எலுமிச்சை அளவு
வெல்லத்தூள்- 2 டேபிள் ஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -அரைடீஸ்பூன
உப்பு -தேவையான அளவு
கடுகு -ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு- 2 டீஸ்பூன்
எண்ணெய் -சிறிதளவு
பொடிக்க:
பொட்டுக்கடலை -ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -இரண்டு
சீரகம்- அரை டீஸ்பூன்
பச்சரிசி -2 டீஸ்பூன்.
செய்முறை:
பாகற்காயை நன்கு கழுவி விதைகளை நீக்கி பொடியாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். புளியை ஒரு கப் நீரில் கரைத்து வடிகட்டவும். பொடிக்க கூறப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும் .வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு உளுந்து தாளித்து பாகற்காயை நன்கு வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாடை போக நன்கு வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், புளிக்கரைசல் சேர்த்து கிளறி கொதிக்க விடவும். கடைசியில் வெல்லம், பொடித்து வைத்துள்ள பொடி ஆகியவற்றை தூவி கிளறி இறக்கவும்.