
மயோனைஸை ‘மயோ’ என்று செல்லமாக கூப்பிடுவதுண்டு. இதை பிரட், பர்கர், சாலட் போன்றவற்றில் தடவி சாப்பிடுவார்கள். மயோனைஸ் என்பது முட்டை, எண்ணை, வினிகர், எழுமிச்சை சாறு போன்றவற்றின் கலவையேயாகும். இதன் நிறம் மஞ்சளில் இருந்து வெள்ளை நிறமாகவும், கிரீமிலிருந்து ஜெல்லாக மாறும். பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில்தான் மயோனைஸ் உருவானது. ரஷ்யர்களை மயோனைஸ் பிரியர்கள் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு மயோனைஸை விரும்பி உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மயோனைஸ் சாஸ் செய்ய தேவையான பொருட்கள்:
எண்ணை- 250 ml.
முட்டை மஞ்சள் கரு-2
மிளகு தூள் -1/4 தேக்கரண்டி.
எழுமிச்சைபழம்- ½
வினிகர்-1 தேக்கரண்டி.
உப்பு-1/2 தேக்கரண்டி.
கடுகு-1/4 தேக்கரண்டி.
மயோனைஸ் செய்முறை விளக்கம்:
முதலில் கடுகை நன்றாக இடித்து பவுடர் செய்து எடுத்து வைத்து கொள்ளவும். இப்போது ஒரு பவுலில் 2 முட்டை மஞ்சள் கருவை எடுத்துக்கொண்டு நன்றாக கலக்கி வைத்து கொள்ளவும். அதில் இப்போது பவுடர் செய்து வைத்த கடுகை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக எண்ணை சேர்க்க வேண்டும். இரண்டு மஞ்சள் கருவிற்கு 250ml எண்ணை சேர்க்கலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக எண்ணை ஊற்றி கலக்கிக் கொண்டேயிருக்கவும். முட்டை ஓரளவிற்கு கெட்டியானதும் வினிகர் சேர்க்கவும். பிறகு அதில் எழுமிச்சை அரை மூடி, மிளகு தூள் ¼ தேக்கரண்டி, உப்பு ½ தேக்கரண்டியை சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது மஞ்சள் நிறம் மாறி வெள்ளை நிறம் வரத்தொடங்கும். இந்த சமயத்தில் மறுபடியும் எண்ணை சேர்த்து கிண்டிக் கொண்டேயிருக்க வேண்டும். மயோனைஸ் சற்று கெட்டியானதும் நிறுத்திவிடவும். இப்போது சுவையான மயோனைஸ் தயார். இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு பிரிட்ஜில் வைக்கவும்.
மயோனைஸில் விட்டமின் ஈ உள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கு நல்லதாகும். விட்டமின் K ரத்தம் உறைவதற்கு உதவுகிறது. ஒமேகா 3 பேஃட்டி ஆசிட் உள்ளதால் இதயம், சருமம், மூளை ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கு நல்லதாகும்.