அலர்ஜி தொல்லைகளை விரட்டும் இலந்தைப்பழம்!

Allergy Thollaigalai Virattum Ilanthai Pazham
Allergy Thollaigalai Virattum Ilanthai Pazhamhttps://tamil.webdunia.com

ருடத்திற்கு ஒரு முறை சீசனில் மட்டுமே கிடைக்கும் பழங்களில் ஒன்று இலந்தைப்பழம். சீனாவை பிறப்பிடமாகக் கொண்ட இலந்தைப்பழம் எண்ணற்ற மருத்துவ பலன்களை கொண்டது. நாம் முக்கனிகள் என்கிறோம், சீனாவில் ஐங்கனிகள் என்கிறார்கள். அதில் ஒன்று இலந்தைப்பழம். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 80 கிலோ பழங்கள் வரை கிடைக்கும். பிப்ரவரி, மார்ச் இதன் சீசன்.

ஆப்பிள், திராட்சையை விட இலந்தைப்பழம் அதிக சத்துக்கள் நிறைந்தது. இந்த பழம் குறைந்த விலையில் இருப்பதால் ஏழைகளின் பழம் என்றும் அழைக்கப்படுகிறது. நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊற வைக்கும் இனிப்பும் புளிப்புச் சுவையும் கொண்டது. இதன் காய்கள் பச்சை நிறத்திலும், பழம் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும்.

இலந்தைப்பழம் குறைந்த கலோரி கொண்ட அதிக நார்ச்சத்துள்ள பழம். அதோடு வைட்டமின் ஏ, பி3, பி6, சி மற்றும் முக்கிய தாதுப்பொருட்களான கால்சியம், தாமிரம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், சோடியம் மற்றும் துத்தநாகம் உள்ளது. இதோடு கார்போஹைட்ரேட் மற்றும் புரதச்சத்தும் கொண்டது.

சீசனில் மட்டுமே கிடைக்கும் பழங்களுக்கு சில விசேஷ மருத்துவ குணங்கள் உண்டு. அதில் இலந்தைப்பழமும் ஒன்று. அடிக்கடி ஏற்படும் அலர்ஜி எனும் ஒவ்வாமைக் கோளாறு, ஆஸ்துமா எனும் மூச்சிரைப்பு, சளி தொல்லை, நுரையீரல் கோளாறுகள், உடலில் ஏற்படும் புண், சொறி, சிரங்கு மற்றும் மேக நோய்களை குணப்படுத்த இலந்தைப்பழம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது என்பதை ஹங்கேரி நாட்டின் மருத்துவ ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இலந்தைப்பழத்திலுள்ள கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், காப்பர், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு தாதுக்கலவைகள் எலும்புகளுக்கு பலம் சேர்த்து ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கும். முழங்கால் மூட்டுத்தேய்மான குறைபாடு சரியாக தினசரி 5 முதல் 10 இலந்தைப்பழம் சாப்பிட சிபாரிசு செய்கிறார்கள்.

இலந்தைப்பழத்தில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் வைட்டமின் சி அதிகமுள்ளது. அளவைப் பொறுத்து 2 அல்லது 3 இலந்தைப்பழம் சாப்பிட்டாலே ஒரு நாள் தேவைக்கான வைட்டமின் சி (ஆண்களுக்கு 90 மி. கி. பெண்களுக்கு 75 மி.கி.) கிடைத்துவிடும் என்கிறார்கள். இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து இரத்த ஓட்டம் சீராகும். எலும்பு தேய்மானம் தடுக்கப்பட்டு, பெருங்குடல் புற்றுநோய் தடுக்கப்படுகிறது.

நம் உடலில் உள்ள எந்தவொரு சுரப்பிகளிலும் வரக்கூடிய தேவையற்ற வீக்கத்தினை வடித்து வற்றச் செய்யக்கூடிய ஆற்றல் உடையது இலந்தைப்பழம், மிகச்சிறந்த கிருமிநாசினி. இதிலுள்ள சயோனின் மற்றும் ஆல்காய்டுகள் இரத்தத்தில் உள்ள நச்சுப்பொருள்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக்குகிறது. இரத்தக்கசிவு நோய்க்கு ஆயுர்வேத மருத்துவத்தில் இலந்தைப்பழம் பயன்படுத்தி வருகிறார்கள். பித்தநீர் அதிகமானால் இரத்தம் கெடும். அதனைத் தடுத்து உடல் பித்தத்தை சமநிலைப்படுத்தி தலைசுற்றல், தலைவலி, மயக்கத்தைத் தவிர்க்கிறது இலந்தைப்பழம்.

பற்களில் படியும் அனைத்து கிருமிகளையும் அழிக்கும் ஆற்றல் உள்ள இலந்தைப்பழத்தை வாயில் போட்டு மென்று தின்றால் பல் ஈறுகளில் ஏற்படும் இரத்த கசிவையும், பயோரியா எனப்படும் பல் ஈறுகளில் ஏற்படும் பிரச்னையையும் சரிப்படுத்தும். தினமும் 40 மி.கி. இலந்தைப்பழம் சாப்பிடுகிறவர்களுக்கு குடல் பிரச்னைகள் வராது. காரணம், அதிலுள்ள பைட்டோ கெமிக்கல்கள், மலச்சிக்கலையும் தவிர்க்க உதவும் என்கிறார்கள்.

இலந்தைப்பழத்தில் உள்ள அதிகப்படியான பொட்டாசியமும், குறைந்தளவு சோடியமும் இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க இரத்த அழுத்தம் சீராக இருக்க வேண்டும். அதற்கு சில இலந்தைப்பழம் சாப்பிடுவது நல்லது. அதோடு மன அழுத்தம் மற்றும் பதற்றம் தவிர்த்து, இரவில் ஆழ்ந்த தூக்கம் வரவும் உதவுகிறது. இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் இன்சோம்னியா நோய் தவிர்க்க இரவில் படுக்கும் முன் ஒரு கிளாஸ் இலந்தைப்பழ சாறு பருகுவது நல்ல பலனை தரும் என்கிறார்கள்.

இலந்தைப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ யும், சி யும் மற்றும் அதிலுள்ள பிளோவினாய்டுகள், பாலிசாட்சுரேட்ஸ்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் சர்க்கரை நோய், இதயநோய் ஆபத்து களிலிருந்து காப்பதுடன், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளையும் தவிர்க்கிறது. தினமும் இலந்தைப்பழ சாறு பருகுவது புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுப்பதாகவும், குறிப்பாக மார்பகப் புற்று மற்றும் இரத்த புற்றுநோய் செல்களை தடுப்பதாக கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உபாதைகளை தடுக்கும் மருந்தாகவும் இலந்தைப்பழம் பயன்படுகிறது. இலந்தைப் பழத்தில் உள்ள ஃபோலிக் அமிலம் கர்ப்பிணி பெண்கள் நலம் காக்கும். அதோடு, இப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பெண்களின் சினைப்பை நீர் கட்டி பிரச்னைகளையும் சரி செய்யும் என்கிறார்கள் ஈரான் நாட்டின் டெக்ரான் பல்கலைக்கழக மெடிக்கல் சயின்ஸ் ஆராய்ச்சியாளர்கள்.

கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஞாபக திறன் முக்கியம். அதனை ஊக்குவிக்கும் ஆற்றல் இலந்தைப்பழத்தில் உள்ளது. இப்பழத்திலுள்ள,‘க்ளூடாமிக்' அமிலம் மூளையை தீவிரமாக இயங்கத் தூண்டக்கூடியது. எனவே படிக்கும் மாணவர்களுக்கு இலந்தைப்பழத்தை உப்பு, புளி மிளகாய் சேர்த்து வடை தட்டி காயவைத்து ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஓநாய் வகை ஆளுமைத்தன்மை பற்றி தெரியுமா?
Allergy Thollaigalai Virattum Ilanthai Pazham

இலந்தைப்பழத்தை கொட்டை நீக்கி பனை வெல்லம், நீர் சேர்த்து காய்ச்சி தேநீர் போல பருக வயிற்றுப்போக்கு நிற்கும், ஆண்களுக்கு பலம் தரும். ஆழ்ந்த தூக்கம் தரும், மாத விடாய் பிரச்னை தீரும், பசியைத் தூண்டும். வாதம் மற்றும் கபம் சம நிலைப்படும்.

இலந்தைப்பழத்தை காய வைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து புண்கள் மீது தடவி வர புண்கள் விரைவில் ஆறும். சருமத் தொற்று நோய்களுக்கும் தடவி வர விரைவில் குணமாகும்.

கோடை க்காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் இலந்தைப்பழத்தை பழமாக, வத்தலாக , தேநீராக மற்றும் சூப்பாக எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். இலந்தைப்பழத்தை பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறும்போது சாப்பிடலாம். தினமும் 5 முதல் 7 பழங்கள் சாப்பிடலாம் என்கிறார்கள். குடல் நோய் உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் மற்றும் பல் நோய் உள்ளவர்கள் இலந்தைப்பழத்தை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com