
கடந்த சில ஆண்டுகளாக, நாம் உட்கொள்ளும் உணவு ஊட்டச்சத்துக்கள் நிரம்பி, ஆரோக்கியம் தருவதாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டதன் விளைவாக, நம்மில் பலரும் சிறு தானிய உணவுகளை நோக்கி நம் கவனத்தை செலுத்த ஆரம்பித்துள்ளோம். நம் முன்னோர்கள் அனைவரும் சிறு தானிய வகை உணவுகளுக்கே முன்னுரிமை கொடுத்து, ஆரோக்கியமுடன் நீண்ட ஆயுள் பெற்று வாழ்ந்து வந்ததை நாம் அறிவோம். சிறு தானியங்கள் (Millets), கம்பு, கேழ்வரகு, சோளம், குதிரைவாலி, தினை என பல வகை உண்டு. இதில் குதிரைவாலி உபயோகித்து ஒரு சுவையான புலாவ் செய்வதற்கான ரெசிபியை இப்பதிவில் பகிர்ந்துள்ளேன். செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
1.குதிரைவாலி அரிசி 1கப்
2.முளை கட்டிய பச்சைப் பயறு ¾ கப்
3.துருவிய கேரட் 1½ டீஸ்பூன்
4.திக்கான தேங்காய்ப் பால் 1 கப்
5.நெய் 1 டேபிள் ஸ்பூன்
6.எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
7.முந்திரிப் பருப்பு 15
8.வெங்காயம் 1
9.பச்சை மிளகாய் 3
10.இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன்
11.பட்டை ஒரு இஞ்ச் துண்டு 1
12.இலவங்கம் 4
13.ஏலக்காய் 4
14.தாமரை மொக்கு (star anis) ½
15.சிறிய பிரிஞ்சி இலை 2
16.ஃபிரஷ் புதினா இலைகள் 20
17.கொதிக்க வைத்த தண்ணீர் 2 கப்
18.உப்பு தேவையான அளவு.
19.மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
செய்முறை:
குதிரைவாலி அரிசியை தண்ணீரில் நன்கு கழுவி, நீரின்றி வடித்து வைத்துக்கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றவும். சூடானதும் மிதமான தீயில் வைத்து, முந்திரிப் பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்து வைத்துக் கொள்ளவும். நெய்யுடன் எண்ணெய்யை ஊற்றி சூடாக்கவும். அதில் பட்டை, இலவங்கம், ஏலக்காய், தாமரை மொக்கு, பிரிஞ்சி இலை ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய்களை மெல்லிசாக நறுக்கிப் போட்டு வதக்கவும். வெங்காயம் சிவந்தவுடன்,
இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். அதன் மீது புதினா இலைகள் மற்றும் முளை கட்டிய பச்சைப் பயறு இரெண்டையும் போடவும். அனைத்தையும் ஒரு சேர நன்கு கலந்து விடவும். பின் தேங்காய்ப்பாலை ஊற்றவும். நுரை வரும்போது கழுவி வைத்துள்ள குதிரைவாலி அரிசியைப்போட்டு, கொதிக்க வைத்த 2 கப் தண்ணீரை உற்றவும்.
பின் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, அடுப்பை சற்று பெரிதாக்கி, கலவை நன்கு வேகும்படி கொதிக்க விடுங்கள். அடிக்கடி கரண்டியால் கிளறி விடுங்க. 6-7 நிமிடம் கழித்து தண்ணீர் அடியில் செல்ல ஆரம்பித்ததும், தீயை மிதமாக்கி தட்டுப்போட்டு பாத்திர த்தை மூடி, பக்கத்திலேயே நின்று கவனிக்கவும். மேலும் ஐந்து நிமிடம் கழிந்ததும் மூடியை திறந்து, அரிசி வெந்து விட்டதையும், தண்ணீர் முற்றிலும் வற்றி விட்டதையும் செக் பண்ணிவிட்டு அடுப்பை அணைத்துவிடவும்.
மீண்டும் மூடியால் மூடி வைத்து, பிறகு பத்து நிமிடம் கழித்து திறக்கவும். புலாவ் ஒன்று சேரும்படி ஒரு கரண்டியால் மெதுவாக கிளறி விடவும். பின் மேற் பரப்பில், வறுத்த முந்திரி மற்றும் துருவிய கேரட் தூவி அலங்கரிக்கவும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, சுவையான குதிரைவாலி முளை கட்டிய பாசிப்பயறு புலாவ் தயார். ஆனியன் ரைத்தாவுடன் பரிமாறவும்.