
முட்டை உணவுகளை அசைவம் என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அதிலுள்ள புரதச்சத்துக்காக தற்போது அனைவரும் உணவில் உபயோகித்து வருகிறோம். தினமும் ஒரு முட்டை எடுக்கலாம் என மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள்.
அத்துடன் துரிதஉணவு கலாச்சாரமும் பெருகிவரும் நிலையில் வீட்டிலேயே ஏதேனும் புதிய முறையில் உணவுகளை முட்டைகள் சேர்த்து செய்ய முடியுமா என்று நினைப்போம். இதோ உங்களுக்காகவே இரண்டு முட்டை ரெசிபிகள்.
கேப்ஸிகம் கப்
தேவை:
மீடியம் சைஸ் குடைமிளகாய் - 6
துருவிய தேங்காய்- 1 கப்
மிளகாய்- 8
பெரிய வெங்காயம் - 4
பச்சை பட்டாணி - 1 கப்
எண்ணெய் - 2 ஸ்பூன்
முட்டைக்கோஸ் - 1 சிறியது
முட்டை - 6
துருவிய சீஸ் - 3 கப்
உப்பு - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
செய்முறை:
குடைமிளகாயின் மேல் காம்புகளை நீக்கி உடையாமல் உள்ளிருக்கும் விதைகளை மட்டும் கவனமாக நீக்கவும். உப்பு கலந்த கொதி நீரில் மிளகாய்களை அப்படியே 2 நிமிடம் போட்டு எடுத்து வைக்கவும். முட்டைக்கோஸ், வெங்காயம் மிளகாய்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைப் பட்டாணியை உரித்து சுடு நீரில் போட்டு எடுக்கவும். அடிகனமான கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், கோஸ், மிளகாய், பட்டாணி இவற்றை வதக்கி தேவையான உப்பை போட்டு வதக்கவும். மேலும் துருவிய தேங்காயையும் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி கரம் மசாலாத்தூள் போட்டு பிரட்டவும்.
இந்த கலவையை குடைமிளகாயின் முக்கால் பாகம் வரை அடைக்கவும். முட்டையை உடைத்து சிறிது மிளகுத்தூள் கலந்து அடித்து குடமிளகாயின் கலவை மேல் ஊற்றவும் . ஒவ்வொரு குடைமிளகாயின் உள்ளும் ஒரு முட்டை அடித்து ஊற்றி துருவிய சீஸை மேலே தூவி கேக் அடுப்பில் வேக வைத்து எடுத்து ஆறியதும் சாப்பிடலாம். இது புதுமையான ருசியில் இருக்கும்.
சைனீஸ் நூடுல்ஸ்
தேவை:
வெந்து வடிகட்டிய நூடுல்ஸ் - 1 கப்
வேகவைத்த முட்டை- 4
நறுக்கிய முட்டைக்கோஸ் , கேரட் பீன்ஸ் - தலா 1 கப்
நறுக்கிய குடைமிளகாய்- 1/2 கப்
பெரிய வெங்காயம்-2
சோயாச்சாஸ் - ஒரு டீஸ்பூன்
சில்லி சாஸ்- 1/2 டீஸ்பூன்
கான்பிளார் அல்லது மைதா - 2 டீஸ்பூன்
எண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன்
உப்பு மிளகு தூள்- தேவைக்கு காய்கறிகளின் வேகவைத்த நீர்( ஸ்டாக்)
செய்முறை:
வடிகட்டிய நூடுல்ஸ் உடன் சிறிது வெண்ணைய் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அரிந்த வெங்காயத்தை வதக்கி நீளமாக மெலிதாக அரிந்து வைத்திருக்கும் காய்கறிகளையும் வதக்கவும். சிறு தீயில் வைத்து வதக்கும்போது காய்கறிகள் அதன் நீரிலேயே வெந்துவிடும்.
இதனுடன் தேவையான உப்பு, மிளகுத்தூள் இவற்றை சேர்த்து காய்கறி வெந்த நீரில் கான்பிளார் மாவை சேர்த்து நன்கு கலந்து காய்கறிகளுடன் சேர்த்து கொதிக்க வந்ததும் வெந்த நூடுல்ஸ், சிறு துண்டுகளாக நறுக்கிய முட்டைகளைப் போட்டுக்கிளறி சோயா சாஸ் சில்லி சாஸ் சேர்த்து மேலே கொத்துமல்லித்தழை தூவினால் வீட்டிலேயே சத்தான டூ மினிட் நூடுல்ஸ் பத்து நிமிடத்தில் ரெடி. காய்கறிகளை நறுக்க நேரம் ஆனாலும் ஆரோக்கியம் முக்கியம்தானே?