“உணவு, உடை, இருப்பிடம்” இவை மூன்றே மனிதன் வாழ தேவையான அடிப்படை காரணிகள் ஆகும். இந்த மூன்றில் மனிதன் உயிர் வாழ மிக முக்கியமாக முதலில் இருப்பது உணவுதான்..! இந்த உணவின் மூலமே மனிதனுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து நலமாக வாழ முடிகிறது. அப்படிப்பட்ட இந்த உணவுகளில், ஒரு சில உணவுகள் உலகின் மிக விலை உயர்ந்த மதிப்புமிக்க உணவு பொருள்களாக அறியப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில உணவுப் பொருட்களையும், அதன் விலைகளையும், தன்மையையும் பற்றி பார்ப்போம். விலையைக் கேட்டாலே தலையே சுத்திரும்..! என்றளவிற்கு இருக்கும் ஒரு சில உணவுப் பொருள்களைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
பெலூகா கேவியர் என்பது பெலூகா வகை மீனின் முட்டைகளில் இருந்து, பெறப்படும் ஒரு வகை (கேவியர்) உணவுப் பொருளாகும். இந்த உணவுப் பொருளானது சிறு சிறு உருண்டைகளாக அரக்கு கலந்த அடர்கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. இந்த மீனானது கஸ்பியன் கடலில் அரிதாக காணப்படுகிறது. இந்த உணவுப் பொருளின் தன்மையும், சுவையும் அதிகம் என்பதால், இதன் விலையோ 1 கிலோவிற்கு, $7000 முதல் $10000 வரை விற்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில், 5.80 இலட்சம் முதல் 8.50 இலட்சம் ஆகும்.
ரூபி ரோமன் திராட்சை உலகின் மிகவும் விலை உயர்ந்த திராட்சை வகைகளில் ஒன்றாகும். இது ஜப்பான் நாட்டில் மிகக் குறைந்த அளவிலேயே விளைவிக்கப்படுகிறது. மற்ற திராட்சைகளை ஒப்பிடும்போது இவ்வகை திராட்சையில் குறைந்த அமிலத்தன்மையும் அதிக சர்க்கரையும் நீர் தன்மையும் இருப்பதால் ஒரு கிலோ ரூ. 7.5 இலட்சத்திற்கு மேல் விற்கப்படுகிறது, அதேபோல்,ஒரு திராட்சை கொத்தின் விலை, $10000 ஆகும். இந்திய மதிப்பில், ₹85000 ஆகும். இந்த வகை திராட்சை ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் மட்டுமே விளைவிக்கப் படுகின்றன.
இந்த குங்குமப்பூவானது அனைவராலும் அறியப்படும் ஒரு வகை மசாலாப் பொருளாகும். குங்குமப்பூவின் செடியானது குரோக்கசு சட்டைவசு என்ற தாவர இனத்தைச் சார்ந்தவை. குங்குமப்பூவானது அதன் தனித்துவமான நிறத்திற்கும் அதன் சுவையின் காரணமாகவும் அதன் நிலையானது அதிகமாக காணப்படுகிறது. ஒரு கிராம் குங்குமப் பூவின் விலையோ ₹250 முதல் ₹500 வரை விற்கப்படுகிறது. அப்படிப் பார்த்தால் ஒரு கிலோ கிட்டத்தட்ட ₹4.95 இலட்சம் வரை இருக்கும்.
வெள்ளை ட்ரஃபிள்ஸ் (white truffles) என்பது மிகவும் அரிதான மற்றும் விலை உயர்ந்த உணவுப் பொருளாகும். இவை நிலத்தடியில் வளரும் ஒரு வகை பூஞ்சைகளாகும். பார்ப்பதற்கு கட்டியான வடிவமற்ற களிமண் போன்ற சாம்பல் கலந்த சந்தன நிறத்தில் காணப்படும். இவை பெரும்பாலும் இத்தாலியின் பீட்மாண்ட் பகுதியில் காணப்படுகின்றன. இந்த வகை பூஞ்சைகள் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் விரும்பி வாங்கப்படுகின்றன. எனவே இதன் விலையோ, ஒரு கிலோ இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ₹3 இலட்சம் முதல் ₹3.60 இலட்சம் வரை விற்கப்படுகிறது.
மாட்சுடேக் காளான்கள், "ட்ரிகோலோமா மாட்சுடேக்" என்று அழைக்கப்படும் ஒருவகை காளான்கள் ஆகும். இவை கிழக்கு ஆசியா மற்றும் வட அமெரிக்காவின் பைன் காடுகளில் வளர்கின்றன. மேலும் அவற்றின் தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்திற்காக மற்ற காளான்களில் இருந்து தனித்துவமாக இவை அறியப்படுகின்றன. பொருளாதார ரீதியாகவும் மதிப்புமிக்கவை, குறிப்பாக இந்த வகை காளான்கள் ஜப்பானியர்களின் கலாச்சாரத்திலும் சமையலிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் நிலையானது ஒரு கிலோ, இந்திய மதிப்பிற்கு ₹1.50 இலட்சம் வரை விற்கப்படுகிறது.
“எவ்வளவுதான் இந்த உலகத்துல லட்சத்துல உணவு பொருள் இருந்தாலும்.. என்னைக்குமே நம்ம அம்மா கையால அன்போட சமைச்சு தர்ற உணவுக்கு முன்னாடி இந்த வகை உணவுகள் எல்லாம் நம்மை போன்ற பாமர மக்களுக்கு சாதாரணம்தான்..!”