பொதுவாகவே முடவாட்டுக்கால் கிழங்கு மலைப்பிரதேசங்களில் தான் வளரும். குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் அடிகளுக்கு மேல், உயரத்தில் உள்ள மலைப்பகுதிகளின் பாறை இடுக்குகளில் இவை வளரும் தன்மை கொண்டது. ஏற்காடு, கொல்லிமலை ஆகிய இரண்டு இடங்களில் இந்தக் கிழங்கு அதிக அளவில் கிடைக்கிறது.
இதை சாப்பிடுவது மூலமாக எலும்பு மூட்டுகளுக்கு இடையே உள்ள மஞ்சைகள் உறுதியாகி மூட்டு வலியைக் குறைக்குமாம். மேலும் எலும்பு சம்பந்தமான பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கும் சிறந்த உணவாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆர்தரைட்டிஸ் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த கிழங்கு அதிக பயனுள்ளதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. எனவே இந்த பதிவில் முடவாட்டுக்கால் பயன்படுத்தி எப்படி சூப் செய்வது எனத் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
முடவாட்டுக்கால் கிழங்கு - 200 கிராம்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - ½ கப் பொறியாளர் நறுக்கியது
தேங்காய் - துருவியது 3 ஸ்பூன்
கசகசா - 1 ஸ்பூன்
பூண்டு - 3 பல்
லவங்கப்பட்டை - சிறு துண்டு
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - ½ ஸ்பூன்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
தக்காளி - 2
செய்முறை:
முடவாட்டுக்கால் கிழங்கு பார்ப்பதற்கு ஆட்டுக்கால் போலவே இருக்கும். இதை நன்றாகக் கழுவி, மேலே உள்ள தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.பின்னர் தேங்காய், கசகசா, இஞ்சி, பூண்டு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் லவங்க பட்டை, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இவை நன்கு வதங்கியதும் முடவாட்டுக்கால், அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து, ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். இதை 20 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும். பின்னர் கீழே இறக்கி பூண்டை தட்டிப் போட்டு, உப்பு மிளகு தூள் தூவினால், ஆரோக்கியமான முடவாட்டுக்கால் சூப் தயார்.
தொடர்ந்து 15 நாட்களுக்கு முடவாட்டுக்கால் சூப் குடித்து வந்தால், மூட்டு வலி, முடக்கு வாதம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.