

இந்தியாவில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரின் விருப்ப உணவாக மாறிவிட்டது சப்பாத்தி. இந்த சப்பாத்தியில் சத்துக்களை அதிகப்படுத்த சிறுதானியங்களை சேர்க்கலாம். அந்த வகையில் குழந்தைகள் வலுவாக வளர்வதற்கு தேவையான சப்பாத்தி மாவு தயாரிக்கும் முறை குறித்தும், மிருதுவான சப்பாத்தி செய்யும் முறை குறித்தும் இப்பதிவில் காண்போம்.
சப்பாத்தி மாவு தயாரிக்கும் முறை
நியாய விலைக் கடைகளில் வாங்கும் கோதுமையாக இருந்தால் அதனை சுத்தப்படுத்தி நன்கு கழுவி மூன்று நாட்கள் காயவைக்க வேண்டும். கடையில் வாங்குவதாக இருந்தால் பஞ்சாப் கோதுமையை 2 கிலோ வாங்கிக்கொள்ள வேண்டும். இது சுத்தமாக இருப்பதால் கழுவி காயவைக்க தேவையில்லை.
பிறகு 100 கி ஓட்ஸ்,100 கி ராகி, 50 கி சோளம் ,100 கி கருப்பு சுண்டல், 100 கி காராமணி, 100 கி பச்சை பயிறு, 100 கி கம்பு, 100 கி வெள்ளை சுண்டல், 50 கி ஆளி விதைகள், 50 கி சூரியகாந்தி விதைகள், 50 கி தர்பூசணி விதைகள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கோதுமை மாவுடன் சேர்த்து ஒரு துணியில் பரப்பி ஒரு நாள் முழுவதும் நன்கு வெயிலில் காயவைக்க வேண்டும்.
பிறகு மாவு மிஷினில் அரைத்து சூடு ஆறிய பிறகு அதனை காற்று புகாத கொள்கலனில்( Air tight container) சேமிக்க வேண்டும். இவ்வாறு சேமிக்க மாவு நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும் . சிறு தானியங்களை மழைக்காலங்களில் காயவைக்க முடியவில்லை என்றால் குறைந்த அளவுக்கு மட்டுமே அதாவது ஒரு கிலோ அளவிற்கு மட்டுமே அரைத்து சேமிக்க வேண்டும். இல்லையெனில் வண்டுகள் பிடித்து கெட்டுப்போக வாய்ப்புள்ளது.
சப்பாத்தி செய்யும் முறை
ஒரு கப் சிறுதானிய கோதுமைமாவுடன் அரை கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சாதாரண சப்பாத்தி மாவு பிசைவதுபோல தயார்படுத்திக்கொள்ள வேண்டும். மாவை நன்கு பிசைந்த பிறகு அதனுடன் சிறிது எண்ணெய் கலந்து அரைமணி நேரம் ஊறவிட வேண்டும். பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு பூரிக்கட்டையை எடுத்துக்கொண்டு சிறுதானிய கோதுமை மாவு மிகவும் மிருதுவாக இருக்கும் என்பதால் மாவை சற்று அதிகமாக தூவி சப்பாத்தியை தேய்க்கவேண்டும்.
தேய்த்த சப்பாத்தியை கைகளில் இரண்டு முறை மாற்றி தட்டி சூடான தோசை கல்லில் போட்டு எடுக்க மிகவும் சத்தான ருசியான மிருதுவான குழந்தைகள் விரும்பும் சப்பாத்தி நமக்கு கிடைக்கிறது. எண்ணையே சேர்க்காமல் சப்பாத்தி தயாரித்தாலும் மிகவும் மிருதுவாக இருக்கும் என்பதை குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு விருப்பமான கிரேவி வகைகளை சேர்த்து சப்பாத்தியை சாப்பிட ருசி அலாதியாக இருக்கும்.
மேற்கூறிய முறையில் சிறு தானிய சப்பாத்தி மாவையும், சப்பாத்தியையும் தயாரித்து குழந்தைகளுக்கு பரிமாறி மகிழ்ச்சி அடையுங்கள்.