

தேவை:
உருளைக்கிழங்கு - 2
கோதுமை மாவு ஒரு கப்
ரவை 1/2 கப்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
இஞ்சி துருவல் 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் 2
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லி சிறிது
தயிர் ஒரு கரண்டி
மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு இரண்டை எடுத்து தோல் சீவி கழுவி கேரட் துருவலில் துருவிக் கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி துருவி கொள்ளவும் பச்சை மிளகாய் இரண்டை பொடியாக நறுக்கி வைக்கவும்.
இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கு, கோதுமை மாவு, ரவை, உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி துருவல், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். கடைசியாக பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி த ழையை சேர்த்து ரவா தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல் நன்கு சூடானதும் ரவா தோசைக்கு வார்ப்பது போல் சுற்றிவிட்டு மெல்லியதாக வார்த்தெடுக்க கிரிஸ்பியான, நல்ல ருசியான தோசை ரெடி..
கைவசம் தோசை மாவு இல்லாவிட்டாலும், திடீரென்று வரும் விருந்தாளிகளையும் சமாளிக்க முறுமுறுப்பான இந்த உருளைக்கிழங்கு தோசையை செய்து அசத்தலாம்.
தினை பாயசம்!
தினை அரிசி ஒரு கப்
பயத்தம் பருப்பு 1 ஸ்பூன்
வெல்லம் 3/4 கப்
ஏலப்பொடி அரை ஸ்பூன்
பால் 1 கப்
முந்திரிப் பருப்பு 10
நெய் 2 ஸ்பூன்
தினை அரிசி, பயத்தம் பருப்பு இரண்டையும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்கு சிவக்க வறுத்து மூன்று கப் தண்ணீர் விட்டு நன்கு குழைவாக வேக விடவும். வெல்லத்தை பொடி செய்து அரை கப் தண்ணீர் விட்டு கரையும் வரை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். வெந்த தினை அரிசியை கரண்டியால் நன்கு மசித்துக்கொண்டு வெல்ல கரைசலை வடிகட்டி விடவும்.
ஏலப்பொடி சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும். நன்றாக கொதி வந்ததும் இறக்கி பால் சேர்த்து நெய்யில் வறுத்த முந்திரி துண்டுகளை போட மிகவும் ருசியான தினை பாயசம் தயார்.