திருச்சியில் குடிகொண்ட பாலக்காட்டு மாரியம்மன்!

Palakkadtu Mariamman graces Trichy
Palakkadtu Mariamman graces Trichy

திருச்சி, தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை சாலையில் அமைந்துள்ளது பாலக்காட்டு மாரியம்மன் திருக்கோயில். கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து குழந்தை வடிவில் சிலையாய் வந்து அருள்பாலிப்பதாக இந்த மாரியம்மன் குறித்து தகவல்கள் கூறப்படுகிறது. இக்கோயில் மாரியம்மன் இங்கு வரக் காரணமான இந்தக் கோயில்  பற்றிய செவி வழிச் செய்தி சுவாரசியமானது.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தில் மாரியம்மன் கோயில் ஒன்று இருந்தது. அந்த அம்மனுக்கு தினசரி பூஜைகள் செய்து வந்த அர்ச்சகருடன் அவரது ஆறு வயது பெண் குழந்தையும்   கோயிலுக்குச் செல்வதுண்டு. ஒரு நாள் மாலை அந்தக் குழந்தை பிராகாரத்தில் இருந்த குதிரை சிலை அருகே படுத்து உறங்கி விட, இதை கவனிக்காத அர்ச்சகர் அர்த்தஜாம பூஜை முடிந்தவுடன் ஆலயத்தை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

அர்ச்சகர் வீட்டிற்கு வந்ததும், ‘குழந்தை எங்கே?’ என மனைவியிடம் அவர் கேட்க, ‘உங்களுடன் கோயிலுக்கு வந்தாளே, திரும்பி வரவில்லையே’ என்ற மனைவி கூற, அப்போதுதான் குதிரை சிலை அருகே சிறுமி தூங்கியது அவருக்கு நினைவுக்கு வந்து பதற்றத்துடன் ஆலய சாவியை எடுத்துக் கொண்டு கோயிலுக்குப் புறப்பட்டார்.

கோயிலுக்கு வந்தும் அவரால் கோயில் கதவை திறக்க முடியவில்லை. அப்போது அசரீரி ஒன்று, ‘குழந்தை என்னிடம் இருக்கட்டும்’ எனச் சொல்ல, பாச வேகத்தில் அந்த அசரீரி மாரியம்மன் வாக்கே என்று தெரிந்தும், அவளிடம் வாதிட்டு இறுதியில், ‘உனக்கு நான் முக்கியமா? உனது குழந்தை முக்கியமா’ என அம்மன் கேட்க, ‘குழந்தைதான் முக்கியம்’ என்ற அர்ச்சகரின் பதிலால் சினமுற்ற, அம்மன் உயிரற்ற உடலாக சிறுமியைத் தர துடித்துப் போனார் அர்ச்சகர்.

‘இத்தனை நாள் உனக்கு பூஜைகள் செய்து வழிபட்டதற்கு இதுதான் பலனா? என் குழந்தையின் உயிரை எடுத்த உனக்கு, இனி பூஜைகள் இல்லை’ என்று ஆவேசத்துடன் அங்கிருந்த அம்மன் சந்தனக் கருப்பு, மதுரை வீரன் சிலைகளை பெட்டியில் வைத்து பெருக்கெடுத்து ஓடிய காவிரியில் வீசினார்.

காவிரியில் மிதந்து வந்த அந்தப் பெட்டி திருச்சி தென்னூர் கிராமத்திலே கரை ஒதுங்கியது. ஊர் மக்கள் அதைத் திறந்து உள்ளே இருந்த சிலைகளை எடுத்து வழிபடத் துவங்கினர். அந்த சமயத்தில் வந்த பஞ்சத்தினால் அம்மனுக்கு முறையாக பூஜைகள் நடத்த இயலவில்லை.

அப்போது அசரீரி வாக்காக ஒலித்த அம்மன், "சிரமம் வேண்டாம். நான் பூமிக்கு அடியில் இறங்கி விடுகிறேன். நீங்கள் ஜோதி வடிவில் என்னை வழிபடுங்கள். உரிய நேரத்தில் நான் மீண்டும் வருவேன்" என உரைத்ததும், அம்மன் இருந்த பூமி இரண்டாகப் பிளந்து, குழந்தை வடிவில் இருந்த அம்மன் சிலை பூமிக்குள் மறைந்து மீண்டும் பூமி மூடிக்கொண்டது.

அம்மன் பூமிக்குள் மறைந்த இடமே தற்போதைய ஆலய கருவறையாகவும் அங்கே பாலக்காட்டு கருங்காலி கட்டையின் மேல்  அசரீரி அருளியபடி அணையா தீபம் சுமார் 600 ஆண்டுகளாக  ஒளி வீசிக் கொண்டிருப்பதாக  பக்தர்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
மயிலாப்பூரின் எல்லைக்காளி, கிராம தேவதை யார் தெரியுமா?
Palakkadtu Mariamman graces Trichy

சமீபத்தில் பக்தர்கள் பிரசன்னம் பார்த்து அம்மன் அனுமதியுடன் ஐம்பொன் சிலை வடிவமைத்து மூலவராய் பிரதிஷ்டை செய்து  குடமுழுக்கு திருவிழா நடத்தி உள்ளனர். அன்னையின் பின்புறம் அந்த அணையா தீபம் இப்போதும் தொடர்ந்து ஒளிவிசிக் கொண்டிருக்கிறது.

அர்ச்சகரை கோபமுறச் செய்த திருவிளையாடல் மூலம் பாலக்காட்டில் இருந்து வந்த அம்மன் ஆதலால், ‘பாலக்காட்டு மாரியம்மன்’ என்று இவள் அழைக்கப்படுகிறாள். திருச்சி செல்பவர்கள் அவசியம் இந்த அம்மனை வழிபட்டு வரலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com