பிரியாணி என்ற வார்த்தையைக் கேட்டாலே பலருக்கு இன்பமாக இருக்கும். அதன் நறுமணம், சுவை என அனைத்துமே அட்டகாசமாக இருப்பதால், இதை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. பிரியாணி என்பது பல நறுமண மசாலா பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு உணவாகும். சைவம், அசைவம் என எல்லா வகையான பிரியாணிகளும் இந்தியாவில் பிரபலம். இந்தப் பதிவில் சைவப் பிரியர்கள் விரும்பி உண்ணக்கூடிய காளான் பிரியாணி எப்படி செய்வது எனப் பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
2 கப் பாஸ்மதி அரிசி
4 கப் தண்ணீர்
1 பிரியாணி இலை
2 ஏலக்காய்
2 கிராம்பு
உப்பு தேவையான அளவு
2 கப் காளான்
1 பெரிய வெங்காயம்
2 தக்காளி
2 பச்சை மிளகாய்
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
1 ஸ்பூன் சோம்பு
1 ஸ்பூன் மஞ்சள் தூள்
1 ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
1 ஸ்பூன் கரம் மசாலா
½ கப் தயிர்
ஒரு கைப்பிடி கொத்தமல்லித் தழை
ஒரு கைப்பிடி புதினா
தேவையான அளவு எண்ணெய்
செய்முறை:
முதலில் பாஸ்மதி அரிசியை நன்கு அலசி சுமார் 30 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அந்த அரிசியில் நான்கு கப் தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து 70% வேக விட்டு, தண்ணீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சோம்பு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அடுத்ததாக இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின்னர் தக்காளியை சேர்க்கவும்.
தக்காளி மென்மையாக வதங்கியதும் காளானை சேர்த்து நன்றாகக் கிளறி 5 நிமிடங்கள் வேக விடுங்கள். பின்னர் தயிரில் சிறிதளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து ஒன்றாகக் கலக்கி காளானுடன் சேர்த்து மசாலா நன்கு படரும் வரை கிளறவும்.
இப்போது தீயைக் குறைத்து தனியாக வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து லேசாகக் கிளறி, அதன் மேல் கொத்தமல்லி மற்றும் புதினாவை தூவி, குறைந்த வெப்பத்தில் நன்றாக மூடி சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் தம் போட்டால் சூப்பரான சுவையில் காளான் பிரியாணி தயார். இது வெயில் காலம் என்பதால் மசாலா பொருட்களை கொஞ்சம் குறைத்து பயன்படுத்துங்கள். இந்த முறையைப் பின்பற்றி பிரியாணி செய்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.