
மஷ்ரூம் மசாலாஅடை
தேவை:
பூரணம் தயாரிக்க:
காளான் _200 கிராம்
வெண்ணெய் _20 கிராம்
எண்ணெய் _2 ஸ்பூன்
பெரியவெங்காயம் _1(பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது_1/4 ஸ்பூன்
மிளகுத்தூள் _1/2 ஸ்பூன்
வற்றல்தூள் _1 ஸ்பூன்
மஞ்சள்தூள் _1/4 ஸ்பூன்
உப்பு _ தேவைக்கு
கரம் மசாலாதூள் _1/2 ஸ்பூன்
மல்லியிலை _ ஒரு கைப்பிடி (நறுக்கியது)
முட்டைகோஸ் _1/2 கப் (பொடியாக நறுக்கியது)
வெளிமாவு தயாரிக்க
கோதுமைமாவு _11/2 கப்
தண்ணீர் _3 கப்
உப்பு _தேவையான அளவு
வாழைஇலை _1
செய்முறை: முதலில் காளானை சுத்தப்படுத்தி சிறிதாக வெட்டி வைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மெல்லிசாக வெட்டிய வெங்காயத்தை சிறிது உப்பு போட்டு வதக்கி இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கி அத்துடன் வெட்டி வைத்த காளானை போட்டு சிறிது மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். காளானில் உள்ள தண்ணீர் வற்றி வதங்கி வரும் வேளையில் வற்றல்தூள், மிளகு தூள், கரம் மசாலாபொடி போட்டு வதக்கி, மல்லிகீரை போடவும். பின்னர் முட்டைகோஸ் சேர்த்து வதக்கி உப்பு சரிபார்த்து 5 நிமிடம் வேகவிட்டு கிளறி தனியாக வைக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமைமாவு எடுத்து சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ளலாம். பின் வாழை இலையை சிறு துண்டுகளாக வெட்டி ஒவ்வொரு துண்டு இலையிலும் ஒரு உருண்டை மாவை பரத்தி அதன் நடுவில் காளான் பூரணத்தை வைத்து மடக்கி வைத்துக்கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு விரிந்த மண் சட்டியை வைத்து சூடாக்கி அதில் மடக்கி வைத்த வாழை இலை அடைகளை பரத்தி ஒரு பக்கம் சுட்டு மறுபக்கம் திருப்பி போட்டு சுட்டு வேகவைத்து எடுக்க வேண்டும். மணத்துடன் கூடிய சுவையான மஷ்ரூம் மசாலா அடை தயார்.
உருளைக்கிழங்கு பந்துகள்
தேவை:
உருளைக்கிழங்கு_1/2 கிலோ
கார்ன்ஃப்ளோர் மாவு _1 கப்
உப்பு ½ ஸ்பூன்
மசாலா தயாரிக்க
பூண்டுபற்கள் _4
பச்சைமிளகாய் _2
இஞ்சி _ ஒரு துண்டு
மல்லித்தழை _ 1கைப்பிடி
சோயாசாஸ் _1/2 டேபிள்ஸ்பூன்
காஸ்மீரி மிளகாய்தூள்_1 ஸ்பூன்
தக்காளிசாஸ் _1 ஸ்பூன்
உப்பு _ ¼ ஸ்பூன்
எண்ணெய் _50 மில்லி
செய்முறை: முதலில் உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து ஆறியதும் தோல் உரித்து நசுக்கி மசித்துவிட்டு அத்துடன் கார்ன்ஃப்ளோர் மாவு, உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு கெட்டியாக பிசைந்து சப்பாத்தி மாவு பக்கத்தில் வைத்து அதை சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியில் 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு தீயை மீடியமாக வைத்து கொதித்த தண்ணீரில் உருளைக்கிழங்கு உருண்டைகளை போட்டு 5 நிமிடம் வேக விட்டு எடுத்து ஒரு கிண்ணத்தில் ஆறிய தண்ணீர் வைத்து அதனுள் போட்டு ஒரு நிமிடத்தில் உருண்டைகளை தனியாக எடுத்து ஒரு விரிவான பாத்திரத்தில் ஆறவிடவும்.
அடுத்து மசாலா தயார் செய்ய ஒரு பாத்திரத்தில் பொடியாக வெட்டிய பூண்டு, மிளகாய், இஞ்சி மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து அத்துடன் காஷ்மீரி மிளகாய்தூள், சோயாசாஸ், தக்காளிசாஸ், உப்பு போட்டு நன்கு கலந்து வைக்கவும். பின்னர் எண்ணெயை கரண்டியில் ஊற்றி சூடாக்கி மசாலாவோடு சேர்த்து நன்கு கலந்துவிடவும். அதன் பிறகு ஆறிய உருளைக்கிழங்கு உருண்டைகளை சேர்த்து நன்கு பிரட்டி எடுக்கவும். அருமையான, சுவையான உருளைக்கிழங்கு பந்துகள் தயார்.