
தினசரி சாதம் சமைக்கிறோம் என்றாலும் அதிலும் சில நுணுக்கங்கள் இருக்கவே செய்கின்றன. அவற்றினை நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டால் எத்தனை கெஸ்ட் வந்தாலும் பதறாமல் சிதறாமல் சமைக்கலாம். வடித்தாலும் சரி, குக்கரில் வைத்தாலும் சரி சில குறிப்புகளை கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியம். அவைகள் இதோ:
கொஞ்சம் புதினா அல்லது வேப்பிலையை காயவைத்து அரிசி சம்படத்தில் தூவிவிட்டால் வண்டு வராது. நீண்ட நாள் பாக்கி வைத்துவிட்டு வெளியில் வெளியூர் சென்றாலும் தத்துக்கரப்பு போன்றவை வராது.
கொஞ்சம் உப்பு கலந்து கழுவினால் அரிசி பளபளப்பாக இருக்கும்.
அரிசியை இரண்டு முறைக்கு மேல் கழுவினால் விட்டமின்களும், தாதுக்களும் குறைந்துவிடும்.
சோறு வடிக்கும்பொழுது சில முறை குலுக்கி வடித்தால் அதில் தப்பித்தவறி கற்கள் ஏதாவது இருந்தாலும் கீழே போய்விடும்.
அரிசி கொதிக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றினால் பொங்கி வெளியே வராது. சாதமும் குழையாமல் வரும்.
சோறு சமைக்கும்போது அரை ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால் ருசி தூக்கலாக இருக்கும்.
புது அரிசியை வாங்கி இரண்டு மாதம் கழித்து சமைக்க ஆரம்பித்தால் பழையதாகிவிடும். அப்பொழுது எப்படி வடித்தாலும் குழையாமல் இருக்கும் சாதம்.
ஆரம்பத்தில் புது அரிசியை சமைக்கும்போது சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்தால் சாதம் குழையாமல் உதிர் உதிராக வரும்.
சாதத்தை குக்கரில் சமைக்கும்பொழுது ஸ்டவ்வில் வைத்து சில நிமிடம் கழித்து வெயிட் போட்டால் சோறு குழையாமல் வரும்.
சாதத்தை குக்கரில் வைக்கும்பொழுது குக்கர் வெயிட்டில் படாமல் ஒரு சுத்தமான சிறு துணியை சுற்றிவிட்டால் கஞ்சி கீழே வழியாமல் துணி உறிஞ்சிக்கொள்ளும்.
பாசுமதி அரிசியை அதிகமாக கழுவினால் வாசனை போய்விடும். ஆதலால் நிறைய தண்ணீர் விட்டு ஒருமுறை மட்டும் பிசையாமல் கழுவவும். அதை 10 நிமிடம் மட்டும் ஊறவைத்து சமைக்கவும். அதிக நேரம் ஊறவைத்தால் சாதம் குழைந்துவிடும்.
சாதத்தை வடித்து அடுப்பில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் நீர் கோர்த்துக் கொள்ளாமலும் நீண்ட நேரம் கெடாமலும் இருக்கும்.
கேஸ் ரோலில் சாதத்தை மூடி வைத்தால் பரிமாறும்போது அதன் மூடியில் இருக்கும் வியர்வை தண்ணியை வெளியில் ஊற்றி விடவும். தவறியும் சாதத்தில் ஊற்றி விடாதீர்கள். அப்படி தெரியாமல் ஊற்றிவிட்டால் சாதம் நீர் கோர்த்து நச நசத்து சீக்கிரம் கெட்டுப்போகும்.
பாசுமதி அரிசியை தனியாக வேகவைத்து வடிக்கும்போது ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டால் சோறு ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும். பிரியாணி உதிர் உதிராக வரவேண்டும் என்றால் சோற்றை தனியாக வடித்து கிரேவியுடன் கலக்கலாம்.
பாசுமதி அரிசி மற்றும் சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்யும் பொழுது நெய், எண்ணெயை சமஅளவில் சேர்த்தால் பிரியாணி திகட்டாது. நெய் மட்டும் சேர்த்தால் திகட்டும்.
எந்த வகையான அரிசியில் எந்த பிரியாணி செய்தாலும் தேங்காய் பால் சேர்க்கவும்.
அதேபோல் இறால் பிரியாணிக்கு கருவேப்பிலை மட்டும் தாளிக்கவும். கொத்தமல்லி, புதினா வேண்டாம்.
சிக்கன் பிரியாணிக்கு ஏலம், கிராம்பு தாளித்தால் திகட்டும். பட்டை, சோம்பு நல்லது. தயிர் சேர்க்க வேண்டும்.
இப்படி சில நுணுக்கங்களை தெரிந்து வைத்துக் கொண்டால் சமையலை எளிதாக முடிக்கலாம்.