வெயில் காலம் வந்துவிட்டாலே நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும். அதற்கு அவ்வப்போது பழங்களும் காய்கறிகளும் சாப்பிட வேண்டும். பழங்களை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக ஜூஸ் போல எடுத்துக் கொண்டால், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். கோடைகாலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் முலாம்பழம் மிகவும் பிரபலமானது. அதை சாதாரணமாக சர்க்கரை போட்டு கரைத்து குடிப்பார்கள். ஆனால் இந்த பதிவில் நான் சொல்லப்போவது போல ஒருமுறை மில்க் ஷேக் செய்து குடித்துப் பாருங்கள் சுவை வேற லெவலில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
முலாம்பழம் - 1
பால் - ½ லிட்டர்.
கஸ்டட் பவுடர் - 2 ஸ்பூன்
ஊறவைத்த பாதாம் பிசின் - 1 கப்
துளசி விதைகள் - 1 ஸ்பூன்
வெண்ணிலா ஐஸ்கிரீம்
நட்ஸ் - சிறிதளவு
சர்க்கரை - ¼ கப்
செய்முறை:
முதலில் பாதாம் பிசினை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். அடுத்ததாக துளசி விதைகளை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வையுங்கள்.
பின்னர் கால் லிட்டர் பாலில் கஸ்டட் பவுடர் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் கலக்கிக் கொள்ளவும். மீதம் இருக்கும் கால் லிட்டர் பாலில் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடுங்கள். பால் நன்கு கொதித்ததும் கஸ்டட் பவுடர் கலக்கிய பாலை கொஞ்சம் கொஞ்சமாக அதில் சேர்த்து கலக்குங்கள். இந்த கலவை திக் ஆனவுடன் அடுப்பை அணைத்து ஆறவிடுங்கள்.
முலாம் பழத்தை இரண்டாக வெட்டி அதன் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி, மேல் தோலை சிவி சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். பின்னர் அந்தத் துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இப்போது இந்த கலவையை அப்படியே கஸ்டட் கலவையில் சேர்த்து கலக்குங்கள்.
இறுதியாக பாதாம் பிசின், ஊற வைத்து துளசி விதைகள், நட்ஸ் ஆகியவற்றை சேர்த்து கலந்ததும், ஒரு அரை மணி நேரம் பிரிட்ஜில் வைத்தால், ஓரளவுக்கு கெட்டியான பதத்திற்கு மாறிவிடும். பின்னர் அதன் மேல் ஒரு ஸ்கூப் வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து சாப்பிட்டால், வெயில் காலத்தில் பனிப்பாறைகள் நிரம்பிய சொர்க்கத்தில் பறப்பது போல உணர்வீர்கள்.