எலான் மஸ்க் என்ற பெயரைக் கேட்டதும் உங்களுக்கு முதலில் ஞாபகம் வருவது என்ன? டெஸ்லா காரா? ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமா? அல்லது ட்விட்டரா? இதில் எது வேண்டுமானாலும் உங்களுக்கு ஞாபகம் வந்திருக்கலாம். ஆனால் எலான் மஸ்க் என்றதும் எனக்கு முதலில் ஞாபகம் வருவது, தனித்துவமான புதுமையான விஷயங்கள்தான்.
ஆம் எலான் மஸ்க் என்றாலே புதுமை என்பதுதான் எனக்கு முதலில் ஞாபகம் வரும். புதிய விஷயங்களை தைரியமாக முயற்சித்து சாதித்துக் காட்டியவர் எலான். அதுவும் நாம் கற்பனை செய்யாத விஷயங்களை கண்முன்னே நிகழ்த்திக் காட்டியவர். இவரது வெற்றிக்கான காரணங்களை நாம் தெரிந்து கொள்வது மூலமாக, நாமும் புதிய பாதையில் பயணிப்பதற்கான உந்துதலை அடைய முடியும் என நம்புகிறேன்.
எலான் மஸ்க் வெற்றிக்கான காரணங்கள்!
1. தைரியமான பார்வை மற்றும் நோக்கம்: எலான் மஸ்கின் வெற்றிக்கு பின்னால், எதிர்காலம் பற்றிய பெரிய பார்வை மற்றும் அவரது நோக்கத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நியூரல் லிங்க் போன்ற அவரது நிறுவனங்கள் வெறும் லாப நோக்கில் மட்டும் தொடங்கப்படாமல், அதன் பின்னால் மனிதகுலத்தை மாற்றி அமைக்கும் நோக்கம் இருந்தது. இதுவே எலான் மஸ்கை மற்றவர்களில் இருந்து தனித்துக் காட்டி வெற்றிக்கு வித்திட்டது.
2. விடாமுயற்சி மற்றும் சகிப்புத்தன்மை: எலான் மஸ்கின் பயணம் என்பது பல பின்னடைவுகள் மற்றும் சவால்கள் நிரம்பியதாகும். ஆனால் அவர் தொடர்ந்து விட்டுக் கொடுக்காமல் தன் வேலையில் கவனம் செலுத்தினார். தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, அவற்றை வெற்றிக்கான படிக்கட்டுகளாகப் பயன்படுத்தினார்.
3. பேரார்வம்: எலான் மஸ்கின் வெற்றியானது அவரது முயற்சியில் அவருக்கு இருந்த தீராத ஆர்வத்தால் கிடைத்ததாகும். சிக்கலான விஷயங்களைப் புரிந்து கொள்வதற்கும், அதற்கானத் தீர்வுகளை கண்டுபிடிப்பதற்கும் மிகுந்த விருப்பம் கொண்டவர் எலான் மஸ்க். இந்த ஆர்வம், பல புதிய விஷயங்களை முயற்சிக்க எரிபொருளாக அமைந்தது.
4. ரிஸ்க் எடுத்தல்: எலான் மஸ்க் தைரியமாக ரிஸ்க் எடுக்கவும், மற்றவர்களை விட புதிதாக எதையாவது முயற்சி செய்வதற்கும் பிரபலமானவர். எதுவாக இருந்தாலும் அதை முதலில் தானே கற்றுக்கொண்டு, அதில் தைரியமாக ரிஸ்க் எடுக்கும் ஆற்றலைக் கொண்டிருந்தார். மேலும் இதையே அவரது குழுவினரையும் செய்ய ஊக்குவித்தார். உண்மையான கண்டுபிடிப்புகள், புது விஷயங்கள் தைரியமாக ரிஸ்க் எடுப்பதில் இருந்தே பிறப்பதாக எலான் மாஸ்க் நம்புகிறார்.
5. கடின உழைப்பு: எலான் மஸ்கட் கடின உழைப்புக்கு பெயர் போனவர். வேலையில் இறங்கிவிட்டால் தூக்கத்தையே மறந்து செயல்படுவாராம். வீட்டுக்குசா சென்று வந்தால் வேலை கெட்டுவிடும் என்பதற்காக, சில காலம் தனது ஆபீஸ் ரூமையே வீடாக மாற்றி தங்கிவிட்டார். குறைந்தது ஒரு நாளைக்கு 16 மணி நேரமாவது உழைத்துக் கொண்டே இருப்பாராம். மற்றவர்களை விட கடினமாக உழைத்தால் மட்டுமே நாம் விரைவாக முன்னேற முடியும் என அவ்வப்போது சொல்லும் எலான் மஸ்க், இளைஞர்களையும் உழைக்கச் சொல்லி பரிந்துரைக்கிறார். குறிப்பாக பிறருக்காக உழைக்காமல், தங்களின் சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்துகிறார்.