
பொதுவாக தோசையை பிளைன் தோசை, ஆனியன் ஊத்தப்பம், பொடி தோசை,சட்னி சாம்பாருடன் தோசை என சாப்பிட்டு இருப்போம். ஒரு மாறுதலுக்காக இந்த மைசூர் சில்லி ரோஸ்டை செய்து பாருங்கள்.கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இருப்பதுடன் ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ்க்கு, ஆபீசுக்கு எடுத்துச் செல்ல ஏற்றதாக இருக்கும்.
தோசை மாவு ஒரு கப்
தேங்காய் அரை கப்
மிளகாய் 2
பூண்டு 4 பற்கள்
கொத்தமல்லி சிறிது
உப்பு தேவையானது
மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், இரண்டு காய்ந்த மிளகாய், பூண்டு பற்கள், கொத்தமல்லி கைப்பிடி அளவு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் விழுதாக இல்லாமல் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். தோசைக் கல் சூடானதும் தோசை ஊற்றி அதில் 2 ஸ்பூன் அளவு அரைத்த மசாலாவை பரப்பி தோசையை சுற்றி நல்லெண்ணெய் விட்டு தட்டை போட்டு மூடி ஒரு பக்கமாக வெந்தெடுக்கவும். நன்கு வெந்ததும் தோசையை மசாலாக்கள் உள்ளிருக்கும் படி மடித்து பரிமாற மிகவும் ருசியாக இருக்கும். இதற்கு அதிகம் புளிக்காத கெட்டி தயிர் தொட்டு சாப்பிட சூப்பரா இருக்கும்.
மசாலா பிரட் பஜ்ஜி!
மசாலா அரைக்க:
புதினா ஒரு கைப்பிடி
கொத்தமல்லி ஒரு கைப்பிடி
இஞ்சி ஒரு துண்டு
பச்சை மிளகாய் 2
உப்பு தேவையானது
பூண்டு இரண்டு பற்கள்
எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன்
கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன்
எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து வைக்கவும்.
பிரட் பஜ்ஜி தயாரிக்க
பிரட் 4 துண்டுகள்
கடலை மாவு 4 ஸ்பூன்
அரிசி மாவு 2 ஸ்பூன்
காரப்பொடி 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் சிறிது
உப்பு தேவையானது
பிரட் ஒன்றை எடுத்து அதில் அரைத்து வைத்த மசாலாவை ஒரு ஸ்பூன் எடுத்து பரப்பி அதன் மீது மற்றொரு பிரட்டை வைத்து கத்தியால் நான்கு பாகங்களாக கட் செய்து கொள்ளவும்.
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, காரப்பொடி, பெருங்காயத்தூள் அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு மாவை கரைத்துக் கொள்ளவும். இதில் நறுக்கிய பிரட் துண்டுகளை முக்கி எடுத்து காய்ந்த எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் நன்கு பொரித்து எடுக்கவும். மிகவும் சுவையான மசாலா பிரட் பஜ்ஜி ரெடி. இதனை டீ காபியுடன் சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும்.