
மனிதன் உயிர் வாழ மிகவும் முக்கியமான ஒன்றுதான் ஆக்சிஜன். ஒருசில நாட்கள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் கூட இருந்துவிடலாம். ஆனால், ஒரு நிமிடம் கூட ஆக்சிஜன் இல்லாமல் இருக்கவே முடியாது. சுற்றுச்சூழலால் போதுமான ஆக்சிஜன் நமக்குக் கிடைக்கவில்லையென்றால், நமது உடம்பில் ஆக்சிஜன் குறைவு படுவது இயற்கை. அந்த சமயங்களில் ஆக்சிஜன் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். பொதுவாக, உணவுகளில் வைட்டமின், தாதுக்கள், PH ஆகியவை இருக்கும். ஆனால், இவை அனைத்தும் சேர்ந்து எந்த உணவுகளில் அதிகம் இருக்கிறதோ அந்த உணவுகளில்தான் அதிகப்படியான ஆக்சிஜனும் இருக்கும். மேலும், அதுவே இரத்த ஓட்டம் சீராக இருக்கவும் உதவும். அந்த வகையில் ஆக்சிஜன் அளவை அதிகமாக்கும் சில உணவுகளைப் பார்ப்போம்.
எலுமிச்சை: உடலில் ஆக்சிஜன் அளவைக் கூட்டுவதற்கு முக்கியமான ஒன்று எலுமிச்சை. இது அமிலம் நிறைந்த ஒன்று. நாம் அதனை சாப்பிட்ட பின்னர் இயற்கையாகவே நமது உடலில் ஆல்கலின் சுரக்கிறது. மேலும் இருமல், நெஞ்செரிச்சல் ஆகியவை சரிசெய்யவும் இது உதவுகிறது.
திராட்சை: திராட்சை ஒரு ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த ஒரு பழம். ஆகையால், இது உடலுக்கு அதிக ஆக்சிஜனைத் தரும். மேலும், இது அதிகப்படியான நொதிகளை சுரப்பதால் ஹார்மோன்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவும். மேலும், திராட்சை இருதய பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பருப்பு வகைகள்: பொதுவாகவே, பருப்பு வகைகள் ஊட்டச்சத்து மிகுந்தவை. ஆகையால், இது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். மேலும், இது இரத்த ஓட்டத்தையும் சீராக்கி உடம்பில் ஆக்சிஜன் அளவையும் அதிகரிக்கும்.
கேரட்: கேரட்டில் அதிகப்படியான வைட்டமின் A, C, B3, B5, B6, குளோரைன், பொட்டாஸியம், இரும்பு, ஜிங்க் மற்றும் காப்பர் ஆகியவை உள்ளன. மேலும், இரும்பு சத்துடன் சேர்த்து ஃபோலிக் அமிலம் இருப்பதால், இது நமது உடம்பில் நைட்ரேட் உற்பத்திக்கு உதவி செய்யும். இந்த நைட்ரேட் உடம்பில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவும்.
பீட்ரூட்: நல்ல சிவப்பு நிறம் கொண்ட பீட் ரூட்டில் நார்ச்சத்து, வைட்டமின் C, ஃபோலேட், மாங்கனீஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் சத்து உள்ளன. இந்த இரும்பு சத்தும் ஃபோலிக் அமிலமும் உடம்பில் ஆக்சிஜன் அளவு அதிகமாக உதவும்.
அவகோடா: அவகோடாவில் வைட்டமின் B, C, E மற்றும் K ஆகியவை உள்ளதால் இது மூளையின் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும். இதிலுள்ள நார்ச்சத்து உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
மாதுளை: இதில் இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர் ஆகியவை உள்ளன. ஆகையால்தான் இது ஆக்சிஜன் அதிகமாக உதவுகிறது. மேலும், இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும். அதேபோல், இரத்த உறைதல் பிரச்னைக்கும் தீர்வாக அமையும்.
கீரைகள்: கீரைகள் ஆக்சிஜன் அதிகரிக்க மட்டுமல்ல, இரத்த சோகை, மயக்கம், உடல் பலவீனம், இரும்புச் சத்து குறைப்பாடு, மூச்சுத் திணறல் ஆகியவற்றிலிருந்தும் காக்கும். மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து எலும்பு ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்.
அடிக்கடி கொட்டாவி விட்டால் மூளைக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்று அர்த்தம். அவர்கள் அந்த சமயங்களில் இந்தப் பழங்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல், தினமும் கீரை, பீட்ரூட், கேரட், அவகோடா ஆகியவையும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.